திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை ஊராட்சியில் பினாமி ஆட்சி!-ஜாதி கட்டுப்பாடு காரணமாக ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு!

பிச்சிவிளை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி.(File Photos)

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஒன்றியம், பிச்சிவிளை ஊராட்சி, சாமுவேல் நகரில் 20 மாதங்களுக்கு முன்பு வரை, நூறு நாள் வேலைக்கும்; மீதமுள்ள நாட்களில் துப்புரவு பணிக்கும் சென்று கொண்டிருந்த பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 32 வயது பெண்.

பொதுப்பிரிவினர் அதிகம் வசிக்கும் பிச்சிவிளை ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 2019 ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், உயர் சாதியினர் என்று தங்களை பிரகடனப்படுத்திக்கொண்டு தம்பட்டம் அடிக்கும் பொதுப்பிரிவினர் அந்த தேர்தலை முழுமையாக புறக்கணித்தனர்.

இந்நிலையில், பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மனைவி சுந்தராச்சி என்ற பெண் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி பிச்சிவிளை ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைக்கண்டு பதட்டமடைந்த உயர் சாதியினர் என்று தங்களை பிரகடனப்படுத்தி கொள்ளும் அந்த நபர்கள்; பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மனைவி சுந்தராச்சி போட்டியின்றி தேர்வாகி விடக் கூடாது என்பதற்காகவும்; அவர் தேர்தலில் வெற்றிப்பெற்று விடக் கூடாது என்பதற்காகவும், அவருக்கு போட்டியாக தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லாத, அதே பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 32 வயது பெண்ணை, ஜெயித்தவுடன் ஒரு மாதத்தில் பதவியில் இருந்து விலகி விடலாம் என்று கூறி, அதே 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வைத்தனர்.

nomination-20

விளைவு?! மொத்தம் 13 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், 10 வாக்குகள் பெற்ற ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். இரண்டு வாக்குகள் மட்டும் பெற்ற சுந்தராச்சி தோல்வியடைந்தார். ஒரு வாக்கு செல்லாத வாக்கு.

இந்த பிச்சிவிளை ஊராட்சியில் அப்போதைய நிலவரப்படி மொத்தம் 827 வாக்குகள் இருந்தன. இதில், பட்டியலினத்தவர்களின் வாக்குகள் 6 மட்டுமே இருந்த நிலையில்,பொதுப்பிரிவினர் அந்த தேர்தலை முழுமையாக புறக்கணித்த நிலையில், ராஜேஸ்வரி குடும்பத்தில் 4 வாக்குகள் மட்டுமே இருந்த நிலையிலும்; ராஜேஸ்வரிக்கு மட்டும் 10 வாக்குகள் எப்படி கிடைத்தது?!சுந்தராச்சியை தோற்கடிப்பதற்காக, பொது பிரிவினர் 7 பேரை மட்டும் ராஜேஸ்வரிக்கு வாக்களிக்க செய்தனர். அதில் ஒன்று செல்லா ஓட்டாகிவிட்டது.

சுந்தராச்சி குடும்பத்தில் அவரது கணவர் சின்னத்துரையையும் சேர்த்து மொத்தமே இரண்டு வாக்குகள் மட்டுமே; அந்த இரண்டு வாக்குதான் சுந்தராச்சி பெற்றது.

2019 ஆம் ஆண்டு பிச்சிவிளை ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்தான், காலியாக இருந்த பிச்சிவிளை ஊராட்சியின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 1-வது வார்டு உறுப்பினராக வைகுண்டச்செல்வி, 2-வது வார்டு உறுப்பினராக கேசவன், 3-வது வார்டு உறுப்பினராக நடராஜன், 4-வது வார்டு உறுப்பினராக சுஜாதா, 5-வது வார்டு உறுப்பினராக யாக்கோபு, 6-வது வார்டு உறுப்பினராக பரிமளச்செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்கள் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.

இவர்களில், 6-வது வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பரிமளச்செல்வி என்பவரின், மூத்த மகன் ஜோன்ஸ் ஜெபராஜ் (வயது 32) திடீரென நோய்வாய்பட்டு இறந்து விட்டதால் அவர் மட்டும் பதவியேற்கவில்லை.

பிச்சிவிளை ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் வைகுண்டச்செல்வி.

பிச்சிவிளை ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் கேசவன்.

பிச்சிவிளை ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர் நடராஜன்.

பிச்சிவிளை ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் சுஜாதா

பிச்சிவிளை ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் யாக்கோபு.

பிச்சிவிளை ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பரிமளச்செல்வி!-இவரது மூத்த மகன் ஜோன்ஸ் ஜெபராஜ் (வயது 32) திடீரென நோய்வாய்பட்டு இறந்து விட்டதால் இவர் பதவி ஏற்கவில்லை.

இந்நிலையில் பிச்சிவிளை ஊராட்சியின் துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்காக திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஆணையாளர் ராணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், 5 ஊராட்சி உறுப்பினர்களும் பதவி விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த ஊராட்சி உறுப்பினர்களிடம் நாம் தொடர்பு கொண்டு பேசினோம்:

“”எங்கள் ஜாதியினர் மட்டுமே அதிகம் வசிக்கும் பிச்சிவிளை ஊராட்சியில்; ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலினப் பெண் பிரிவுக்கு ஒதுக்கியிருப்பது தவறு; பட்டியலினப் பெண் தலைவராக இருக்கும் வரை, பிச்சிவிளை ஊராட்சியில் துணைத் தலைவர் தேர்தல் நடக்காது; ஊராட்சி உறுப்பினர் பதவி இருந்தால்தானே தேர்தல் நடக்கும்?! எங்கள் ஜாதி மக்களின் ஒருமித்த முடிவின் படி; எங்களில் 5 பேர் ஊராட்சி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டோம்”. என்றனர்.

சட்டத்தை விட; ஜனநாயகத்தை விட; எங்களுக்கு ஜாதிதான் முக்கியம் என்று பிச்சிவிளை ஊராட்சி மக்கள் அனைவரும் ”ஊர் கட்டுபாடு” என்ற போர்வையில் சவால் விடுகின்றனர்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கீழ்காணும் கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.

இருட்டறையில் உள்ளதடா உலகம்,
சாதி இருக்கின்றதது என்பானும் இருக்கின்றானே?
மருட்டுகிற மதத் தலைவர் வாழ்கின்றாரே?
வாயடியும் கை அடியும் மறைவெதென்னாள்?
சுருட்டுகிறார் தம் கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம் தமக்கு என்று சொல்வார்தம்மை
வெருட்டுவடுவது பகுத்தறிவே
இல்லையாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே ஆகும்.

இதற்கு தமிழ்நாடு அரசும்; மாநில தேர்தல் ஆணையமும் என்ன முடிவு எடுக்கப்போகிறது?!

பொறுத்திருந்துப் பார்ப்போம்.

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply