உள்ளாட்சித் தேர்தலில் அறிமுகம் ஆகியிருக்கும் ஆள்கடத்தல் கலாச்சாரம்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

நாடாளுமன்ற ஜனநாயகம், சட்டமன்ற ஜனநாயகம் ஆகியவற்றை விட உள்ளாட்சி ஜனநாயகம் தான் மிகவும் வலிமையானது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக உள்ளது. அதனால் தான் நாட்டு மக்களுக்கான எந்த ஒரு திட்டமிடலும் உள்ளாட்சியிலிருந்து தொடங்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்திய ஜனநாயகம் வலிமைப்படுத்தப்பட வேண்டும் என்றால், உள்ளாட்சியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும். அதற்காகத் தான் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஆனால், உள்ளாட்சிகளில் ஜனநாயத்தை தழைக்கச் செய்வதற்கான தேர்தல்கள் நடத்தப் படுவதற்கு முன்பாகவே, ஜனநாயகத்தை படுகொலை செய்வதற்கான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, வாக்குப்பெட்டிகளை மாற்றுவது, வெற்றி பெற்ற வேட்பாளரை தோல்வியடைந்ததாகவும், தோல்வியடைந்த வேட்பாளரை வெற்றி பெற்றதாகவும் அறிவிப்பது போன்ற ஜனநாயகப் படுகொலைகள் பலமுறை நடந்துள்ளன. இப்படி செய்வதன் மூலம் தமிழகத்தை ஆளும் கட்சிகள் தங்கள் வலிமையை குறுக்கு வழியில் நிரூபிக்கும்.

ஆனால், தமிழ்நாட்டு வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், வேட்பு மனுத் தாக்கலின் போதே, எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி மனுத்தாக்கல் செய்ய விடாமல் தடுப்பது, அதையும் கடந்து களத்தில் இறங்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுவை இல்லாத காரணங்களைக் கூறி தள்ளுபடி செய்ய வைப்பது என அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து மனுத்தாக்கல் செய்த வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களை கடத்திச் சென்று, அவர்களின் தொழில்களை அழித்து விடுவதாகவும், குடும்பத்தினரை கொன்று விடுவதாகவும் கூறி மிரட்டும் புதிய கலாச்சாரம் தமிழக அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வேட்பாளர்களை பணத்தால் அடிக்கும் வித்தையும் பல இடங்களில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. தங்களின் செல்வாக்கு மீதும், மக்கள் மீதும் நம்பிக்கையற்றோர் நடத்தும் இத்தகைய தாக்குதல்களில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

–சி.கார்த்திகேயன்

Leave a Reply