சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள செங்கலுத்துபாடி எனும் கிராமத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக குளம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. ஆனால், சுற்று சுவர் தவறாக கட்டியதால் நீர் தேக்க முடியாமல் நீர் வெளியேறி குளம் வறண்டுக் காணப்படுகிறது.
ஏற்காடு தலைச்சோலை உள்ள அண்ணாமலையார் கோவில் மற்றும் செங்கலுத்துபாடி கிராமத்தில் வியு பாயிண்ட் உள்ளிட்ட இடங்களை சுற்றுலா தலங்களாக உருவாக்கும் முயற்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சேலம் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் ஏற்காட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்கலுத்துபாடி கிராமத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்காக ஒரு படகு குளம் அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இதற்காக சுமார் 200 மீட்டர் சுற்றளவில் மிகப்பெரிய குழிவெட்டி சுற்று சுவர் எழுப்பி நீர் தேக்கி வைத்தனர். ஆனால், சுற்று சுவர் தவறாக கட்டியதால் நீர் தேக்க முடியாமல் நீர் வெளியேறி குளம் வறண்டுக் காணப்படுகிறது.
இங்கு நீர் நிற்காதக் காரணத்தால் இந்த குளம் அருகில் உள்ள கிராமத்தின் பொது கிணறுகளில் தண்ணீர் இருப்பதில்லை. ஏற்காடு வந்த ஆட்சியர் மகரபூஷணம் இது குறித்து தகவல் அறிந்ததும் செங்கலுத்துபாடி சென்று குளத்தை பார்வையிட்டார்.
இந்த கிராமத்தை மேம்படுத்தவே தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முன்வந்ததாகவும், தற்போது அரசாங்க பணம் எதுவும் இதற்காக செலவிட முடியாது என்றும், ஒரு சில நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் இத்திட்டத்தை செய்து முடிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த கிராம மக்கள் உடல் உழைப்பை இதற்காக இலவசமாக கொடுத்தால் இந்த திட்டத்தை வெற்றியடைய செய்ய முடியும் என சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் கூறி சென்றார்.
–நவீன் குமார்.