ஸ்ரீவைகுண்டம் அணையில் ஆக்கிரமித்துள்ள செடிக்கொடிகளை அகற்றி, தூர்வார வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், தூத்துக்குடி மாவட்ட நதிநீர் பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் சி. நயினார் குலசேகரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் இன்று (14.07.2014) கோரிக்கை மனுக் கொடுத்துள்ளார்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாய பயன்பாட்டுக்கும் ஆதாரமாக தாமிரபரணி ஆறு விளங்குகிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்து உள்ளது. இங்கிருந்து வடகால், தென்கால் மூலம் பாசன வசதிக்காக தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வடகால் மூலம் ஏரல், தூத்துக்குடி பகுதிகளும், தென்கால் மூலம் ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, குரும்பூர் பகுதிகளும் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணை முழுவதும் ஏராளமான செடிக்கொடிகள் ஆக்கிரமித்து உள்ளன. மேலும், அணையில் அதிகளவு சகதி, மணல் மேடு நிறைந்து உள்ளது. இதனால் அணையில் போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணைப் பகுதியில் 96.40 ஏக்கர் நிலம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அணையை தூற்வாருவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
வனத்துறை, பொதுப்பணித்துறை என இருதுறைகளின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே தூர்வார முடியும் என்கிற சூழல் நிலவுவதால், தூர்வாரும் பணியில் பல ஆண்டுகளாகத் தொய்வு ஏற்பட்டு வருகிறது.
எனவே, ஸ்ரீவைகுண்டம் அணையில் உள்ள செடிக்கொடிகள், மணல் மேடுகளை அகற்றி தூர்வார அரசு நடவடிக்கை மேற்கொண்டால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். தமிழக முதல்வர் மனது வைத்தாலதான் இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
-பொ.கணேசன் @ இசக்கி.