நடைப்பயிற்சியின் சுகாதார பயன்கள் மற்றும் மக்கள் மருந்தகப் பொது மருந்துகள் பற்றி விழிப்புணர்வை உருவாக்க புதுதில்லியின் பழங்கோட்டையில், இன்று நடைபெற்ற ஆரோக்ய பாரம்பரிய நடைபயிற்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவும், பிரமுகர்களும் பங்கேற்றனர்.
ஒரு வாரகாலம் கொண்டாடப்படுகின்ற மக்கள் மருந்தக தினத்தின் நான்காவது நாளான இன்று நடைபயிற்சியால் ஏற்படும் உடல்நலம், உடல் சார்ந்த செயல்பாடுகள் என்ற செய்திகளை பரவலாக்கவும், மக்கள் மருந்தக மையங்களில் தரமான, செலவு குறைந்த பொது மருந்துகள் கிடைப்பது பற்றிய செய்தியைப் பரவலாக்கவும், 9 நகரங்களில் 10 இடங்களில் ஆரோக்கியத்திற்கான பாரம்பரிய நடைப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவை நினைவுகூரும் வகையில், இந்த ஆண்டு இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் குழு (பிஎம்பிஐ) மக்கள் மருந்தக தினத்தின் ஒரு வார கால கொண்டாட்டங்களை 2022 மார்ச் 1 அன்று தொடங்கியது. மக்கள் மருந்தக உறுதி ஏற்பு யாத்திரை, மகளிர் சக்தி கௌரவிப்பு, குழந்தைகளுக்கு உகந்த மக்கள் மருந்தகம் என்ற நிகழ்வுகளை முறையே மார்ச் 1,2,3 ஆகிய தேதிகளில் பிஎம்பிஐ நடத்தியுள்ளது.
–எம்.பிரபாகரன்