சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி கோகுல் ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
போதிய சாட்சிகள் இல்லாததால், 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரத்தை, மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் இன்று (08/03/2022) ஒத்திவைத்தது. இன்று (08/03/2022) காலை அதுகுறித்த விசாரணை வந்தபோது, வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை ஒட்டி பிற்பகலில் தண்டனை விவரத்தை அறிவிப்பதாக நீதிபதி சம்பத் குமார் அறிவித்திருந்தார்.
அதன்படி, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ், அருண், குமார் உள்ளிட்ட 10 பேருக்கு தண்டனை விவரத்தை மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் வழங்கினார்.
இதில், யுவராஜ் மற்றும் அருண் ஆகிய இருவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது சாகும் வரையில் சிறை தண்டணை அளிக்கப்பட்டுள்ளது. குமார், சதிஷ்குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
பிரபு மற்றும் கிரிதர் ஆகிய இருவருக்கும், குற்றஞ்சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்டோருக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆயுள் மற்றும் கூடுதலாக 5 ஆண்டுகளுடன் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது சாதியை சேர்ந்த பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்ததற்காக, கோகுல்ராஜை கடத்தி கொண்டு சென்று இவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். துவக்கத்தில் ஆள் காணவில்லை, சந்தேக மரணமாக கோகுல் ராஜ் வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. கோகுல் ராஜ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மூலமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்குக்காக 106 சாட்சிகள், 500 ஆவணங்களை விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கில் அறநிலையத்துறையினரிடம் இருந்து கைப்பற்றிய கண்காணிப்பு (CCTV) கேமரா பதிவு, கோகுல்ராஜின் உடல்கூறு மற்றும் தடய அறிவியல் ஆய்வு அறிக்கை, அரசு மருத்துவர்களின் சாட்சியங்கள் இந்த வழக்கிற்கு மிகவும் பக்க பலமாக இருந்தது.
மேலும், இவ்வழக்கில் எந்த அழுத்தத்திற்கும், யாருடைய மிரட்டலுக்கும், ஆசை வார்த்தைக்களுக்கும் அடிப்பணியாமல், விலைபோகாமல் வாதாடிய அரசு வழக்கறிஞர் ப.பா.மோகனின் உண்மையான தொழில் தர்மம் மிகவும் பாராட்டிற்குரியது.
அதேபோல், இவ்வழக்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச்செல்வன் மற்றும் அவரது தலைமையிலான செய்தி மற்றும் தொழிட்நுட்ப குழுவினர் அளித்த நேர்மையான சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இந்த வழக்கிற்கு மேலும் வலுச்சேர்த்துள்ளது என்பதை இங்கு நாம் குறிப்பிட்டே ஆகவேண்டும்
Case-Number-31-2019-spl-sc-p1-1
Case-Number-31-2019-spl-sc-p2_watermarked
Case-Number-31-2019-spl-sc-p3_watermarked
Case-Number-31-2019-spl-sc.p4-1
Case-Number-31-2019-spl-sc-p9-1
நான்கு நீதிபதிகளின் விசாரணைக்குப் பிறகு இவ்வழக்கில் நடுநிலை தவறாது இன்று தீர்ப்பு வழங்கியுள்ள மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் அவர்களின் நேர்மையான சட்ட செயல்பாடு, நீதித்துறை இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்ற நம்பிக்கையை சாமானியனின் மனதிலும் ஆழமாக விதைத்துள்ளது.
-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com