புதுதில்லியில் இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற 3-வது தேசிய இளையோர் நாடாளுமன்ற விழா 2022-ன் நிறைவு நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா உரையாற்றினார்.
இந்த விழாவில் பேசிய திரு ஓம் பிர்லா, தேசிய இளையோர் நாடாளுமன்றம் என்பது நாடாளுமன்ற விதிமுறைகளையும், ஜனநாயக நடைமுறைகளையும் இளைஞர்கள் அறிந்து கொள்வதற்கான சிறந்த நிகழ்ச்சி என்றார். மேலும் புதிய இந்தியா கட்டமைப்பு நடைமுறையில் இளைஞர்களின் பங்கேற்புக்கு இது ஊக்கமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
உலகில் அதிவேகமாக ஏற்படும் மாற்றங்கள் பற்றி குறிப்பிட்ட அவர், இந்த மாற்றங்களை இளைஞர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலமே மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொண்டு நாட்டை முன்னேற்ற முடியும் என்றும் கூறினார். நாடு முன்னேறும் நிலையில், இளைஞர்கள் தங்களின் திறன், சக்தி ஆகியவற்றின் மூலம் வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் ஜனநாயக அமைப்புகளை வலுப்படுத்துதலுக்கு பங்களிப்பு செய்ய வேண்டுமென்று அவர் கோரினார்.
சட்டம் இயற்றும் அமைப்புகளின் கவுரவமும், பெருமையும் சீர்குலைந்து வருவது குறித்து கவலைதெரிவித்த திரு ஓம் பிர்லா, சட்டம் இயற்றும் அமைப்புகள் விவாதங்களுக் கானவையே தவிர, இடையூறுகள் ஏற்படுத்த அல்ல என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், நாட்டின் செயல்பாடுகளிலும், ஜனநாயகத்திலும் அதன் நடைமுறைகளிலும் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்பதால் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் உண்மையில் பிரகாசமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தமது தனிப்பட்ட அனுபவங்கள் சிலவற்றை பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்ட திரு தாக்கூர், இளைஞர்கள் தங்களுக்கான வரம்பை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது என்றும் தங்களின் வார்த்தைகளை செயலாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தேசிய இளையோர் நாடாளுமன்றம் 2022-ல் தேசிய அளவிலான போட்டியில் போபாலைச் சேர்ந்த ராகேஸ்வரி அஞ்சனா முதலிடத்தையும், ராஜஸ்தானின் துங்கர்பூரைச் சேர்ந்த சித்தார்த் ஜோஷி 2-வது இடத்தையும், பத்திண்டாவின் அமர்ப்ரீத் கௌர் 3-வது இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கு திரு ஓம் பிர்லா விருதுகளை வழங்கினார்.
முதல் 3 இடத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முறையே ரூ.2 லட்சம், ரூ. 1.5 லட்சம், ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசோடு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
–எஸ்.சதிஸ் சர்மா