அகமதாபாத்தில் இன்று (12.03.2022) தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் நரேந்திர மோதி, அந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதலமைச்சர் பூபேந்திர பாய் பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், தண்டி யாத்திரையில் ஈடுபட்ட மகாத்மா காந்தி மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார். இந்த மாபெரும் யாத்திரை இதே நாளில் தான் தொடங்கப்பட்டது. “பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அநீதிக்கு எதிராக காந்தியடிகள் தலைமையில் நடைபெற்ற போராட்டம், இந்தியர்களாகிய நமது கூட்டு வலிமையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உணரச் செய்தது” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
முன்பு காலனி ஆதிக்க ஆட்சிக்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பு என்பது காலனி ஆதிக்கத்தின் நிர்வாகிகளை சாந்தப்படுத்துவதற்காக மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்துவதாக இருந்ததாக பிரதமர் தெரிவித்தார். அதே போன்று, தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் பெருமளவு முன்னேற்றம் அடைந்த போதிலும், முந்தைய ஆட்சிக் காலங்களில் பாதுகாப்பு படையினரின் நிலைமை பெருமளவு மாறுபட்டதாக இருந்தது. ஆனால் ஜனநாயக காலகட்டத்திற்கேற்ப செயல்படத் தேவையான பேச்சு வார்த்தை மற்றும் இதர மென்மையான திறன்கள் தற்போதைய காவல்துறையினருக்கு தேவைப்படுகிறது.
காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் மீதான எண்ணத்தை மாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அந்தவகையில் பிரபலமான கலாச்சாரத்தில் காவல்துறையினரை சித்தரிப்பது உதவிகரமாக இருந்ததில்லை. பெருந்தொற்று காலத்தில் காவல்துறை பணியாளர்கள் மனிதநேயத்துடன் பணியாற்றியதை அவர் சுட்டிக்காட்டினார். “சுதந்திரத்திற்கு பிறகு, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளில் சீர்திருத்தம் செய்திருக்க வேண்டும். “சீருடைப் பணியாளர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற கருத்து உருவாகியிருந்தது ஆனால் அந்த கருத்து தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தற்போது சீருடைப் பணியாளர்களை காணும் மக்கள், அவர்களிடமிருந்து உதவிக்கான உத்தரவாதத்தை பெறுகின்றனர்” என்று அவர் கூறினார்.
பணிச்சுமையால் ஏற்படும் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள, காவல்துறையினருக்கான கூட்டுக்குடும்ப கட்டமைப்பின் ஆதரவு குறைந்து வருவதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மன அழுத்தத்தில் இருந்து விடுபட செய்ய யோகா நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு நிபுணர்கள் பாதுகாப்பு படைகளில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். “நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த மனஅழுத்தம் இல்லாத பயிற்சி முறைகள் அவசியம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு மற்றும் காவல்துறை பணிகளில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், அவர்களை பிடிப்பதற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். இதுபோன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மாற்றுத்திறனாளிகளும் இந்தத் துறைக்கு பங்களிப்பை வழங்க வகை செய்யும் எனவும் அவர் தெரிவித்தார்.
காந்திநகரில் தேசிய சட்டப்பல்கலைக்கழகம், பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தடய அறிவியல் பல்கலைக்கழகம் போன்றவை செயல்படுவதாக அவர் கூறினார். இந்த அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், இந்த துறைகளில் முழுமையான கல்வியை உருவாக்க இந்த அமைப்புகள் அவ்வப்போது ஒருங்கிணைந்து நடத்துவது அவசியம் என்றும் தெரிவித்தார். “இந்தப் பல்கலைக்கழகத்தை காவலர் பல்கலைக்கழகமாக கருதக்கூடிய தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம். இது, நாட்டின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகும்” என்று அவர் கூறினார். கும்பல் மற்றும் கூட்ட உளவியல், பேச்சு வார்த்தைகள், ஊட்டச்சத்து மற்றும் தொழில்நுட்பம் போன்ற பாடப்பிரிவுகளில் கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இங்கு பயிலும் மாணவர்கள் தங்களது சீருடையும், மனித நேய பண்புகளும் ஒன்றிணைந்தவை என்பதை எப்போதும் மனதில் கொள்வதுடன், அவர்களது முயற்சிகளில் சேவை உணர்வு குறைவு ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்று கேட்டு கொண்டார். பாதுகாப்பு துறையில் இளம் பெண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து அவர் மனநிறைவு தெரிவித்தார். “பாதுகாப்பு துறையில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம். அறிவியல், கல்வி அல்லது பாதுகாப்பு என எதுவாக இருந்தாலும் பெண்கள் தான் முன்னணியில் நின்று வழிநடத்துகின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.
எந்த ஒரு நிறுவனத்திலும் பயிலும் முதலாவது அணியினர், அந்த நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்து செல்வதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். குஜராத்தில் உள்ள பழங்கால மருந்தியல் கல்லூரி, இம்மாநிலத்தை மருந்து தயாரிப்பு தொழிலில் முன்னோடியாக திகழச் செய்யும் அளவுக்கு பங்காற்றியிருப்பதையும் அவர் நினைவு கூர்ந்தார். அதே போன்று அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் (இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம்) நாட்டில் எம்பிஏ கல்வி முறையின் பெருக்கத்திற்கு வழிவகுத்தது.
காவல்துறை, குற்றவியல் நீதி மற்றும் சீர்திருத்த நிர்வாகங்களின் பல்வேறு பிரிவுகளுக்கு, உயர்தர பயிற்சி பெற்ற மனிதவளத் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 2010-ல் குஜராத் மாநில அரசால் தோற்றுவிக்கப்பட்ட பாதுகாப்பு ஆற்றல் பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்தி தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் தேசிய காவலர் பல்கலைக்கழகத்தை அரசு உருவாக்கியுள்ளது. இந்த பல்கலைக்கழகம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக, 01, அக்டோபர் 2020 முதல் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகம் தொழில்துறையினரிடம் இருந்து அறிவாற்றல் மற்றும் வளங்களை பயன்படுத்தி தனியார் துறையினருடன் ஒத்துழைப்புகளை உருவாக்குவதுடன், காவல்துறை மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு பிரி்வுகளில் உயர் சிறப்பு மையங்களையும் ஏற்படுத்த உள்ளது.
இந்த தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம், காவல்துறை மற்றும் காவல் அறிவியல் மற்றும் மேலாண்மை, குற்றவியல் சட்டம் மற்றும் நீதி, இணைய உளவியல், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய பாதுகாப்பு, குற்றப்புலனாய்வு, பாதுகாப்பு சங்கேத மொழிகள், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உத்திகள், உடற்கல்வி மற்றும் விளையாட்டு, கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பல்வேறு பிரிவுகளில் பட்டயப்படிப்பு (டிப்ளமோ) முதல் டாக்டர் பட்டம் வரையிலான கல்வியை வழங்குகிறது. தற்போது 18 மாநிலங்களைச் சேர்ந்த 822 மாணவர்கள் இந்த பாடப்பிரிவுகளில் சேர்ந்துள்ளனர்.
எஸ்.சதிஸ் சர்மா