பிரம்மபுத்ராவில் ஹால்தியாவிலிருந்து சரக்குப் போக்குவரத்தை நிறைவு செய்த மிக நீளமான கப்பல் பாண்டு துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியுள்ளது.

பிரம்மபுத்ரா நதியில் மிக நீளமான எம்வி ராம்பிரசாத் பிஸ்மில் கப்பல் பயணித்துள்ளதை அடுத்து அந்த வழித்தடத்தில் பெரிய கப்பலை இயக்கி மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் சாதனை படைத்துள்ளது.

90 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல், கொள்கத்தாவின் ஹால்தியா தளத்திலிருந்து சரக்குப் போக்குவரத்தை நிறைவு செய்து சோதனை ஓட்டத்தை முடித்துள்ளது. தற்போது கவுகாத்தியில் உள்ள பாண்டு துறைமுகத்தில் அந்த கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. இந்த கப்பலுடன் டிபி கல்பனா சாவ்லா, டிபி ஏபிஜே அப்துல்கலாம் என்ற இரண்டு படகுகளின் பயணத்தை கடந்த மாதம் 16-ந் தேதி ஹால்தியாவின் ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்திலிருந்து மத்திய துறைமுங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை, ஆயூஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கொல்கத்தாவிலிருந்து கவுகாத்தி வரை, இந்தோ-பங்களாதேஷ் நிர்ணய வழித்தடத்தில், பெரிய கப்பலின் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஜாம்ஷெட்பூர் டாடா உருக்காலையிலிருந்து 1793 மெட்ரிக் டன் இரும்பு கம்பிகள் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டன.

வடகிழக்கு மாநிலத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கேற்ப, நீர்வழிப் போக்குவரத்து புத்துயிர் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் கூறியுள்ளார். நீர்வழிப் போக்குவரத்து செலவு குறைவாக உள்ளதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பிரம்மபுத்ராவின் வழியாக கப்பல் போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் மத்திய அரசும், பங்களாதேஷ் அரசும் 80:20 விகிதத்தில் தூர்வாரும் பணியை மேற்கொண்டன. இந்தப் பணிகள் அமைச்சர் சர்பானந்த சோனாவால் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு எம்வி லால்பகதூர் சாஸ்திரி கப்பல் 200 மெட்ரிக் டன் உணவு தானியத்தை இந்திய உணவுக் கழகத்திற்காக பாட்னாவிலிருந்து பாண்டு வரை பயணித்து கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.

திவாஹர்

Leave a Reply