உலகின் மிக நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல மின்சார வாகனமான டொயோட்டா மிராய்-ஐ மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி,ஆர்.கே.சிங், மகேந்திரநாத் பாண்டே, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவன மேலாண்மை இயக்குநர் மசகாசு யோஷி முரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனமும், வாகனத் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையமும் இணைந்து ஆய்வு நடத்தி, உலகின் மிக நவீனமான எரிபொருள் மின்கல மின்சார வாகனமான டொயோட்டா மிராயை, வடிவமைத்துள்ளனர். இந்த வாகனம் ஹைட்ரஜனால் இயங்கக் கூடியது மட்டுமில்லாமல் இந்திய சாலைகள் மற்றும் பருவநிலைக்கு ஏற்றதாகும். இந்தியாவில் இந்த வகையில் இது முதலாவது முன்னோடி திட்டமாகும். பசுமை ஹைட்ரஜன் அடிப்படையிலான சுற்றுச் சூழலை நாட்டில் உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்கலத்தின் தனித்துவ பயன்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதைபடிம எரிபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலம் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிசக்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முக்கிய முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவை 2047 ஆம் ஆண்டில் எரிசக்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டதாகும்.
ஹைட்ரஜனால் இயங்கும் எரிபொருள் மின்கல மின்சார வாகனம், ஜீரோ உமிழ்வுக்கு பெரும் தீர்வாக அமைந்துள்ளது. தண்ணீரைத் தவிர கரியமில உமிழ்வு இல்லாத சுற்றுச் சூழலுக்கு முற்றிலும் உகந்ததாக இது இருக்கும்.
பசுமை ஹைட்ரஜனை உயிரி எரிபொருட்களைக் கொண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக உருவாக்கலாம். பசுமை ஹைட்ரஜன் வளத்தை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தியாவுக்கான தூய்மையான குறைந்த விலையிலான எரிசக்தி பாதுகாப்பை உருவாக்க முடியும்.
–எம்.பிரபாகரன்