விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஆகியவை இணைந்து ‘விங்ஸ் இந்தியா 2022’ எனும் ஆசியாவின் மிகப்பெரிய விமானப் போக்குவரத்து தொடர்பான நிகழ்ச்சியை மார்ச் 24 முதல் 27 வரை ஹைதராபாத்தில் நடத்துகின்றன.
இத்துறையின் வேகமாக மாறிவரும் சூழலைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற தளத்தை வழங்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. புதிய வணிகங்களை கையகப்படுத்தல், முதலீடுகள், கொள்கை உருவாக்கம் மற்றும் பிராந்திய இணைப் பு ஆகியவற்றில் இது கவனம் செலுத்தும்.
வாங்குபவர்கள், விற்பனையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை இணைக்கும் நோக்கத்தை அடைவதில் ‘விங்ஸ் இந்தியா 2022’ முக்கியப் பங்காற்றும். விமானப் போக்குவரத்து மையமாக ஹைதராபாத் இருப்பதால் அங்கு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விங்ஸ் இந்தியா விருதுகள் வழங்கப்படும். நாட்டின் 75-வது ஆண்டின் சுதந்திரத்தைக் கொண்டாடும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, “இந்தியா@75: விமானத் தொழிலுக்கான புதிய தொடுவானம்” என்பது நிகழ்வின் கருப்பொருளாக இருக்கும்.
விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம் சிந்தியா 25-ம் தேதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர் வி கே சிங் (ஓய்வு) உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
–திவாஹர்