பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 21.07.2014 அன்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
பாக் ஜலசந்தி பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கி, சித்ரவதை செய்யப்படுவது பற்றி உங்களுக்கு நான் பல தடவை கடிதம் எழுதி விட்டேன். நீண்ட காலமாக உள்ள இந்த பிரச்சினையை தீர்க்க சில பரிந்துரைகளை நான் கடந்த ஜூன் 3–ந்தேதி உங்களை சந்தித்த போது கொடுத்த மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.
இந்த பிரச்சினையில், தாங்களும், தங்கள் தலைமையிலான அரசும் நல்ல முறையில் அணுகுவதற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அதிகாரிகள் திறம்பட செயல்பட்டு இலங்கையில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க செய்தனர்.
இந்தியா–இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக கடந்த மாதம் 17–ந்தேதி வெளியுறவுத்துறை மந்திரி முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக அறிகிறேன். இறுதியில் இந்த பிரச்சினையை மத்திய அரசு உயர்மட்ட அளவில் ஆலோசிப்பதை வரவேற்கிறேன்.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கள் பற்றி மாநில அரசுக்கு மத்திய மீன்வளத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதில் இந்தியா–இலங்கை இடையே சர்வதேச கடல் எல்லையில் ஒளிரும் மிதவைகளை அமைப்பது பற்றி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களிடம் அளித்த மனுவிலும், எழுதியுள்ள கடிதங்களிலும் குறிப்பிட்டுள்ளேன். இலங்கையுடன் 1974 மற்றும் 1976–ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தம் மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டுள்ளது. எனவே கச்சத்தீவை திரும்பப் பெற்று இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்ட வேண்டும் என்று கூறியுள்ளேன்.
மேலும் கச்சத்தீவு சட்ட விரோதமாக இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்தியா–இலங்கை இடையே கடலில் வரையறுக்கப்பட்டுள்ள சர்வதேச எல்லைகட்டுப்பாடு கோட்டை ஒரு தீர்வாக தமிழக அரசு ஏற்கவில்லை. இந்த பிரச்சினை நிலுவையில் உள்ள நிலையில் கடல் எல்லையில் ஒளிரும் மிதவை அமைக்க பரிசீலினை செய்வது பொருத்தமானதோ, நடைமுறைப்படுத்த சாத்தியமானதோ அல்ல.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நாங்கள் 50 சதவீத மானிய உதவியுடன் பெரிய மீன்பிடி கப்பல் வாங்க உதவுவது உள்பட சில திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறோம். நான் உங்களிடம் ஜூன் 3–ந்தேதி கொடுத்த மனுவில் மீனவர்களுக்கு ரூ.1520 கோடி செலவில் ஒருங்கிணைந்த சிறப்பு தொகுப்பு திட்டங்களை அமல்படுத்தவும், ஆண்டுக்கு ரூ.10 கோடி பராமரிப்பு தொகையாகவும் கொடுக்க கோரிக்கை விடுத்து இருந்தது உங்களுக்கு நினைவு இருக்கலாம்.
நான் கொடுத்த மனுவில் மீனவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய ஒருங்கிணைந்த தொகுப்புத் திட்டங்களை பற்றிய விபரங்கள் கீழ்கண்டவாறு இடம் பெற்றிருந்தது…
* மீனவர்கள் பாக் ஜலசந்தியை தவிர்த்து ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வசதியாக அதற்குரிய பெரிய படகுகள் வாங்க ரூ.975 கோடி கொடுக்க வேண்டும்.
* நடுக்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு உதவும் வகையில் மீன் பதப்படுத்தும் பூங்காவை ரூ.80 கோடி செலவில் ஏற்படுத்த வேண்டும். இது நடுக்கடலில் மீன் பிடிக்கும் அதிகரிக்கவும், பாக் ஜலசந்தி நெருக்கடியை தீர்க்கவும் உதவும்.
* ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மூக்கையூர், திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் மீன்பிடித்துறை முகங்களில் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளை ரூ.420 கோடி செலவில் உருவாக்க வேண்டும்.
* ஆண்டுதோறும் துறைமுக பராமரிப்பு பணிகளுக்கு ரூ.10 கோடி வழங்க வேண்டும்.
* வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மீனவர்களுக்கு உதவும் வகையில் எந்திர படகுகளுக்கான அதிவேக டீசலை மாதம் 500 லிட்டர் வழங்க வேண்டும்.
* நாட்டு படகுகளை எந்திரப்படகுகளாக மாற்ற வழங்கப்படும் ரூ.3 கோடியை ரூ.9 கோடியாக வழங்க வேண்டும். அப்படியானால் தான் 5 ஆண்டுக்குள் மீதமுள்ள 32,000 நாட்டு படகுகளையும் எந்திர படகுகளாக மாற்ற முடியும்.
மேலும் பாக் ஜலசந்தியில் போதுமான மீன்பிடியை உறுதி செய்ய ரூ.100 கோடி மானியச் செலவில் வலைகள் அறிமுகம் செய்யும் திட்டத்தையும் ஒருங்கிணைந்த தொகுப்பு திட்டத்தில் கூறியுள்ளோம்.
பாக் ஜலசந்தியும், மன்னார் வளைகுடாவும் மீன் பிடிப்பதற்கான சிறப்பு சூழல் தொடர்பான மண்டலங்களாகும். இதில் மன்னார் வளைகுடா பகுதி இந்தியாவின் முதல் பாதுகாக்கப்பட்ட மீன் வள கோளப் பகுதியாக உள்ளது. பாக் ஜலசந்தி கடல் பகுதி மிகவும் ஆழமற்ற பகுதியாகும்.
எனவே, இந்த இரு இடங்களிலும் மீன்பிடி தொழில் ஏற்றதாக இல்லை. மேலும் அவர்களால் கடலோர மீனவர்களால் பண்ணை குட்டைகளையும் மற்ற விவசாயிகள் எதிர்ப்பால் அமைக்க முயலாது.
இதற்கிடையே இரு நாட்டு மீனவ சமுதாய தலைவர்கள் சந்தித்து பேசியதிலும் தங்கள் பாரம்பரிய பகுதியில் மீன் பிடிப்பது பற்றி தெளிவான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த அணுகுமுறை மேம்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
எனவே, மத்திய அரசு தமிழக அரசின் இந்த நியாயமான கவலைகளை மனதில் கொள்ளும் என்று நம்புகிறேன். மேலும் இந்த சிக்கலான விவகாரத்தில் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை காக்க நடவடிக்கை எடுக்கவும், பொருத்தமான நீண்ட கால தீர்வை காண நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.