21-ம் நூற்றாண்டின் தொற்றுநோய்க்கு பிந்தைய காலகட்டத்திற்கேற்ப நமது சுகாதார அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவும், மறுசீரமைக்கவும், புதுப்பிக்கவும் வேண்டியதன் அவசியத்தை குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தும் இந்த மாபெரும் பணியில் பொதுத்துறை, தனியார் மற்றும் மக்கள் போன்ற அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
நேட்ஹெல்த்தின் 8-வது ஆண்டு உச்சி மாநாட்டில் முன்பதிவு செய்யப்பட்ட காணொலி மூலம் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், நமது சுகாதார அமைப்பில் உள்ள சவால்கள் தொடர்பான பல மதிப்புமிக்க பாடங்களைக் பெருந்தொற்றின் போது கற்றுக்கொண்டோம் என்று கூறினார். மேலும், இந்த அனுபவத்தை ஆய்வுக்கு உட்படுத்த அவர் அழைப்பு விடுத்தார்.
உலகெங்கிலும் உள்ள சுகாதார அமைப்புகளுக்கு கொவிட்-19 சவாலாக உள்ளது என்பதை தெரிவித்த அவர், இந்தியா, ஒரு குழுவாக, வியக்கத்தக்க வகையில் எதிர்த்துப் போராடியதோடு, தடைகளை எதிர்கொள்வதில் பெரும் முன்னேற்றத்தைக் காட்டியது என்று கூறினார்.
“தடுப்பூசிகளின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் 180 கோடி டோஸ்கள் வழங்கப்பட்டதில் இது பிரதிபலிக்கிறது. இது ஒரு அற்புதமான சாதனை மற்றும் உலகளாவிய அளவுகோலாகும்,” என்று மேலும் கூறினார். பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள இந்திய சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களையும் திரு. நாயுடு பாராட்டினார்.
சுகாதாரத்திற்கான பொதுச் செலவினங்களை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவையைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், சர்வதேச சுகாதார அமைப்பின் தரநிலைகளின்படி, மருத்துவர்-மக்கள் தொகை விகிதத்தை அதிகரிப்பது உள்ளிட்ட திறன் மேம்பாட்டுடன் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே உள்ள சுகாதார வசதிகள் இடைவெளியை அவசரமாக குறைக்க அழைப்பு விடுத்த திரு. நாயுடு, கிராமப்புற இந்தியாவில் ஆரம்ப சுகாதாரத்திற்கு வழங்க வேண்டிய உடனடி உத்வேகத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஆயுஷ்மான் பாரத், மக்கள் மருந்தகங்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்மொழிவு உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களை அவர் பாராட்டினார்.
–எம்.பிரபாகரன்