புதுதில்லியில் இன்று (மார்ச் 29, 2022) நடைபெற்ற மழைநீர் சேகரிப்பு இயக்கத்தின் கீழ் 3-வது தேசிய நீர் மேலாண்மை விருதுகளை வழங்கி ஜல்சக்தி திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் தேசிய நீர் மேலாண்மை விருதுகள், நீர் வள இயக்கத்தின் விரிவாக்கம் ஆகியவை நமது அன்றாட வாழ்வில் பூமியில் நீரின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும், இது பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார். மழைநீர் சேகரிப்பு இயக்கம் 2022-ன் கீழ் ஜல்சக்தி திட்டத்தை தொடங்கி வைப்பது தமக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்த இயக்கத்தின் பணியில் அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கிராம தலைவர்கள் நீர் சேகரிப்பு பணியில் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டது போல வரலாற்றில் பெரிய அளவிலான நீர் பாதுகாப்பு இயக்கமாக இதை எடுத்து செல்ல உறுதி ஏற்க வேண்டும் என்று அனைவரையும் வலியுறுத்தினார்.
நீர் என்பது வாழ்க்கை என்று கூறுவது முற்றிலும் பொருத்தமானது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்திய கலாச்சாரத்தில் ஆறுகள் சிறப்பு மகத்துவத்தை பெற்றிருப்பதாகவும், தாயாக வணங்கப்படுவதாகவும் தெரிவித்தார். உத்தரகாண்டில் கங்கா, யமுனா, மத்திய பிரதேசத்தில் நர்மதா, பெங்காலில் கங்கா சாகர் ஆகிய ஆறுகள் புனிதமானவையாக கருதப்படுகின்றன. நவீனமயம் மற்றும் தொழில்துறை பொருளாதார தாக்கத்தால் இயற்கையுடனான இணைப்பை நாம் இழந்து விட்டோம் என்று கூறிய அவர், மக்கள் தொகை பெருக்கம் இதற்கு ஒரு காரணமாக உள்ளது என்று கூறினார்.
உலக மக்கள் தொகையில் 18 சதவீதமாக உள்ள இந்தியாவில் 4 சதவீதம் அளவிற்கே தூய்மையான நீர்வள ஆதாரங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற விருதுகள் மூலம் மக்கள் மனதில் தண்ணீர் குறித்த உணர்வை ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
–எஸ்.சதிஸ் சர்மா