இலங்கை இனப்படுகொலை தொடர்பாக விசாரிக்கும் ஐ.நா. விசாரணை குழுவுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் என்று கேட்டு பிரதமர் நரேந்திரமோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், இலங்கை நாட்டுடன் இந்தியா கொண்டுள்ள உறவு பற்றிய விவகாரத்தில் மிக ஆழமான உணர்வுகள் உண்டு. குறிப்பாக, இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் நடந்த இனப் படுகொலை பற்றியும், அதன் பிறகு அந்த நாட்டில் வசித்துவரும் தமிழர்கள் அங்கு இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றியும் அவர்களிடம் ஆழ்ந்த வருத்தம் உண்டு.
இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் அங்கு வசிக்கும் சிறுபான்மை தமிழ் மக்களை தொடர்ந்து இனவேறுபாடுடன் நடத்துவது ஆகியவற்றுக்காக அந்த அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்பது, தமிழக மக்களில் ஒரு பிரிவினரின் கருத்தாகவும், அரசியல் ரீதியான கருத்தாகவும் உள்ளது.
இதன் பின்னணியில்தான், இலங்கையில் தமிழ் மக்களை வேறுபாடுடன் நடத்தும் இலங்கை அரசின் செயலையும், அங்கு நடந்த மனித உரிமை மீறலையும் கண்டித்து தமிழக சட்டசபையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பிரச்சினை குறித்து நான் முன்னாள் பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும் எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, இலங்கையில் நடந்த மனித உரிமைகள் மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதற்காக ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தில் வாக்களிப்பதில் இந்தியா பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டது.
தற்போது உங்கள் தலைமையில் புதிய அரசு அமைந்திருப்பதால், இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாறுதல் இருக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்பினோம்.
கடந்த ஜூன் மாதம் உங்களுக்கு கொடுத்த கோரிக்கை மனுவிலும், இலங்கை இனப் படுகொலையை கண்டித்து ஐ.நா.வில் இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும், அந்தக் குற்றங்களுக்கு இலங்கை அரசை பொறுப்பேற்க செய்ய வேண்டும், அதன் மூலம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.
அதுமட்டுமல்ல, அங்கு தமிழ் ஈழம் அமைவது தொடர்பாக இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் உலகின் வெவ்வேறு பாகங்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்துவது பற்றியும் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தேன்.
ஆனால், பத்திரிகைகளில் வந்த செய்தியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதில், இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஐ.நா.வின் விசாரணைக் குழுவுக்கு விசா கொடுக்க இந்தியா மறுப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
அந்தச் செய்தி உண்மையாக இருந்தால், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு விசா தர இந்தியா மறுத்திருந்தால், தமிழக மக்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக அமையும்.
இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடு இலங்கை என்பதாலும், இலங்கை அகதிகள் பலர் இன்னும் தமிழகத்தில் வசித்து வருவதாலும், விசாரணைக் குழு இந்தியாவுக்கு வந்து இங்கு விசாரணை நடத்த வேண்டும்.
எனவே, இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, விசாரணைக் குழுவுக்கு விசா அளிப்பது பற்றியும், அவர்கள் இங்கு வந்து நியாயமான, சார்பற்ற விசாரணை மேற்கொள்வதையும் உறுதி செய்ய வேண்டும். இது, இலங்கையைப் பற்றி இங்குள்ள தமிழர்களின் வலிமையான உணர்வுகளுக்கு வடிகாலாக அமையும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.