தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் செல்லும் என, சென்னை உயர்நீதிமன்றம் இன்று (07/04/2022) தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான கடந்த அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தை எதிர்த்து, தங்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (07/04/2022) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லும். இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இச்சட்டம் செல்லத்தக்கது. இந்த 7.5 சதவீத இடஒதுக்கீடின்படி மாணவர் சேர்க்கையை தொடரலாம். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஓதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஆய்வு செய்ய வேண்டும் என இந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தீர்ப்புரையின் உண்மை நகல், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com