சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் தனியார் துறை பெருமளவில் பங்கேற்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.

இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் தனியார் துறை பெருமளவில் பங்கேற்க வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் பிரம்மாண்டமான சுகாதாரத் தேவையை பூர்த்தி செய்ய அரசின் முயற்சிகளுக்கு உறுதுணையாக தனியார் துறை, மருத்துவ தொழில் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை இயக்கமாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

புதுதில்லி சப்தர்ஜங் மேம்பாட்டு பகுதியில் புதிய மகாஜன் இமாஜிங் வசதியை தொடங்கி வைத்து உரையாற்றிய திரு நாயுடு, உலகத் தரம் வாய்ந்த சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சோதனைக்கூடங்களை மக்கள் அணுகும் வகையில் செய்வது தற்போதைய அவசியத்தேவை என்று கூறினார். உயர்தரமிக்க ஆய்வுக்கூடங்கள், மருத்துவர்கள் நோய்களை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏதுவாகும் என்று அவர் கூறினார்.

இந்தியாவில் தொற்றா நோய்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாக உள்ளதாக கூறிய திரு நாயுடு, தனியார் துறை மருத்துவ பிரிவினர், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, சுகாதாரமற்ற உணவு பழக்க, வழக்கங்கள் அபாயத்தை ஏற்படுத்துவது குறித்து மக்களிடையே, குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்கள் சோம்பலான வாழ்க்கை முறையைக் கைவிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோவிட் பெருந்தொற்று, மாறிவரும் பருவநிலை ஆகியவை நமது பழக்க, வழக்கங்கள், வாழ்க்கை முறை பற்றி நமக்கு பல பாடங்களை கற்பித்துள்ளதாக கூறிய திரு நாயுடு, யற்கையின் மடியில் அதிக நேரத்தை செலவழிப்பதுடன், மேலும் நீடித்த வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திவாஹர்

Leave a Reply