ஜம்மு கஷ்மீரில் உள்ள பள்ளி பஞ்சாயத்தில் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கும் பேரணி இடத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குழுவினர் பார்வையிட்டனர்.

ஜம்மு கஷ்மீரில் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்தில் இம்மாதம் 24 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பேரணி இடத்தை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையிலான மூத்த அதிகாரிகள் இடம்பெற்ற உயர்நிலை குழுவினர் இன்று பார்வையிட்டனர்.

இந்த ஆண்டு “பஞ்சாயத்து ராஜ் தினம்” மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், உயிரி தொழில்நுட்பத் துறை, அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது.

பள்ளி பஞ்சாயத்தில் இருபதே நாட்களில் சூரிய மின்உற்பத்தி அமைப்பு நிறுவப்பட்டது. 500 கிலோவோல்ட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்யும் அமைப்பு 6,408 சதுரமீட்டர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த பஞ்சாயத்தின் 340 வீடுகள் விளக்கு மற்றும் தூய்மையான மின்சாரம் வழங்கப்படுகிறது. மேலும், மத்திய அரசின் கிராமப்புற மின்சக்தி ஸ்வராஜிய திட்டத்தின்கீழ் கரியமில வாயு நீக்கப்பட்ட முதலாவது பஞ்சாயத்தாக மாறவிருக்கிறது.

இந்த இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், தேசிய அளவிலான பஞ்சாயத்துராஜ் தினத்திற்கு பள்ளி பஞ்சாயத்தை தெரிவு செய்திருப்பது ஜம்மு கஷ்மீருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளிக்கும் உயர் முன்னுரிமையை காட்டுகிறது என்றார். மேலும், இந்த யூனியன் பிரதேசத்தில் பஞ்சாயத்துராஜ் அமைப்புகளை வலுப்படுத்துவதில் மோடி அரசு கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பின் ஜம்மு கஷ்மீரில் முதன்முறையாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில்களின் தேர்தலுக்குப் பின் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோதி இங்கு பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply