இளைஞர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் வெற்றிகரமான தலைவர்களாக உருவாக சகிப்புத்தன்மை, பொறுமை, ஒழுக்கம், கடின உழைப்பு, வாசிப்பு மற்றும் கருணை ஆகிய பண்புகள் உதவும் என்று குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு இன்று வலியுறுத்தினார்.
தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தெலுங்கு மாணவர்களுடன் குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில் உரையாடிய அவர், வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள அறிவுறுத்தினார். “\சாதி, மதம் மற்றும் பிராந்தியம் போன்ற குறுகிய கருத்துக்களை தாண்டி நீங்கள் எப்போதும் உயர வேண்டும், மற்ற மதங்களை ஒருபோதும் அவமதிக்காதீர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.
சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால் ஒருவர் தலைவராக முடியாது என்பதை குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், மக்களின் ஆணைக்கேற்ப தலைவர் நடக்க வேண்டும் என்றார். திறமை, திறன், நல்ல நடத்தை மற்றும் பண்பு ஆகியவற்றை ஒரு தலைவர் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஓட்டம் அல்லது யோகா போன்ற உடல் செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதற்கு எதிராக அவர்களை எச்சரித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தியைப் பேணுவதன் முக்கியத்துவத்தை கொவிட்-19 பெருந்தொற்று எடுத்துக்காட்டியதைச் சுட்டிக்காட்டிய அவர், ஆரோக்கியமான மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவில் கவனம் செலுத்துமாறு அவர்களை அறிவுறுத்தினார்.
ஒருவரின் தாய்மொழியைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை திரு நாயுடு மீண்டும் வலியுறுத்தினார். ஒரு குழந்தையின் ஆரம்பக் கல்வி தாய்மொழியில் இருக்க வேண்டும் என்றும் பிற மொழிகளில் பின்னர் புலமை பெறலாம் என்றும் அவர் கூறினார்.
–திவாஹர்