தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் செயல்பாடுகளை மேம்படுத்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தல்.

தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளை, இதுவரை இல்லாத வகையில் 2021-22-ம் ஆண்டில் அதிகபட்சமாக ரூ 125 கோடி நிதியையும்  திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிதியான ரூ 748 கோடியையும் பெற்றுள்ளது என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இன்று தெரிவித்துள்ளார்.

தேசிய கனிம ஆய்வு அறக்கட்டளையின் (என்எம்ஈடி) நான்காவது ஆட்சி மன்றக்குழு கூட்டத்திற்கு அமைச்சர் திரு ஜோஷி இன்று தலைமை தாங்கினார். என்எம்ஈடி தன்னாட்சி பெற்ற அமைப்பாக தற்போது செயல்படுவதால், அதன் செயல்பாடுகளுக்கு நிதி ஒரு தடையாக இருக்காது என்று அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியா இயக்கத்தை வலுவூட்டுவதற்காக ஆய்வு மற்றும் சுரங்க நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மாநில அரசுகளை அவர் வலியுறுத்தினார். 2021-22-ம் ஆண்டில் என்எம்ஈடி மூலம் நிதியளிக்கப்பட்ட ஆறு கனிமத் தொகுதிகள் நான்கு மாநில அரசுகளால் ஏலம் விடப்பட்டன, இதன் மூலம் ரூ 1.63 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டது என்று திரு ஜோஷி கூறினார்.

2021-22-ம் ஆண்டில் 14 மாநில அரசுகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ 880 லட்சம் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. சுரங்கத் துறையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள், மாநில அரசுகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்களாக உள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் புரி,  மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் துறை (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஆய்வு மற்றும் சுரங்கப்பணிகளை மேலும் துரிதப்படுத்த, மாநில அரசுகளின் பங்குதாரர்களுடன் பயனுள்ள சந்திப்புகளை நடத்த வேண்டியதன் அவசியத்தை இரு அமைச்சர்களும் வலியுறுத்தினர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply