கஜுராஹோவில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார்.

ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதில் இந்திய ரயில்வே உறுதியுடன் உள்ளதாக ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கஜுராஹோ ஜான்சி தேசிய நெடுஞ்சாலை / விரைவுச்சாலைக்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது இதை தெரிவித்தார்.

அமைச்சர் தனது பயணத்தின் போது, பண்டேல்கண்ட் பகுதியில் பிரதமரின் கிராமப்புறத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை ஆய்வு செய்தார். மகாராஜா சத்ரசல் கன்வென்ஷன் சென்டர் பகுதியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டங்களை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

கஜுராஹோவிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார். சத்தர்பூர் மற்றும் கஜுராஹோவில் இரண்டு ரேக் பாயிண்ட்டுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். இதனுடன், ரயில் பயணத்திற்கான பயண சீட்டுகளை, 45,000 தபால் நிலையங்கள் வாயிலாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். விரைவில் முக்கியமான இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ராமாயண எக்ஸ்பிரஸ், போன்ற பாரத கவுரவ் ரயில்களின் மின்மயமாக்கல் பணிகள் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதே காலத்திற்குள், வந்தே பாரத் ரயில் சேவையும் செயல்பாட்டிற்கு வரத் தொடங்கும் என்றார். ‘ மக்களுக்குச் சேவை செய்வதே அரசின் பணி ’ என்ற மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளின் போது மனப்பூர்வமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கஜுராஹோ ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றப்படும் அவர் தெரிவித்தார். உள்ளூர் நிர்வாகம் மற்றும் ரயில்வேயுடன் இணைந்து, விவசாயிகள் தங்கள் நிலத்தில் சூரிய சக்தி ஆலைகளை அமைத்து, அவர்களின் வருமானத்தை அதிகரிக்க உதவிடும் நடவடிக்கைகளை ஊக்குவித்தார். இதற்கான சோதனை அடிப்படையிலான முன்னோடித் திட்டம் புந்தேல்கண்டுடன் தொடங்கப்பட உள்ளது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply