சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா உடன் வாஷிங்டனில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு.

சர்வதேச செலாவணி நிதியம்-உலக வங்கி வசந்தகால கூட்டங்களை ஒட்டி, சர்வதேச செலாவணி நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டாலினா ஜார்ஜிவா உடன் வாஷிங்டன் டி.சி.யில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இருதரப்பு கூட்டத்தை நடத்தினார்.

இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் திரு ஆனந்த வி. நாகேஸ்வரன் மற்றும் சர்வதேச செலாவணி நிதிய முதல் துணை நிர்வாக இயக்குநர் திருமதி கீதா கோபிநாத் போன்ற மூத்த அதிகாரிகள் இச்சந்திப்பின் போது இருந்தனர்.

​​உலக மற்றும் பிராந்திய பொருளாதாரங்கள் தற்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் இந்தியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது அவர்கள் விவாதித்தனர்.

கொவிட்-19 சவால்களை எதிர்கொண்ட போதிலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கும் இந்தியாவின் உறுதியை திருமிகு ஜார்ஜீவா எடுத்துரைத்தார். இந்தியா பின்பற்றும் பயனுள்ள கொள்கை கலவை குறித்து திருமிகு ஜார்ஜீவா பேசினார். சர்வதேச செலாவணி நிதியத்தின் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா அளித்த பங்களிப்பிற்காக அவர் பாராட்டினார்.

இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கும் பிற பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களுக்கும் இந்தியா உதவியதை திருமிகு ஜார்ஜீவா பாராட்டினார். குறிப்பாக இலங்கையின் கடினமான பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா அளித்து வரும் உதவிகளை அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச செலாவணி நிதியம் இலங்கைக்கு ஆதரவளித்து அவசரமாக நிதி உதவி வழங்க வேண்டும் என்று திருமதி நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். சர்வதேச செலாவணி நிதியம் தொடர்ந்து இலங்கையுடன் இணைந்து தீவிரமாக பணியாற்றும் என நிர்வாக இயக்குநர் நிதி அமைச்சரிடம் உறுதியளித்தார்.

திவாஹர்

Leave a Reply