கப்பற்படை தலைமை தளபதி மாலத்தீவுகளுக்கு பயணம்!

கப்பற்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றப் பின் அட்மிரல் ஆர் ஹரிகுமார் முதன்முறையாக 2022 ஏப்ரல் 18 முதல் 20 வரை மாலத்தீவுகளில் பயணம் மேற்கொண்டார். 

இந்தப் பயணத்தின்போது, மாலத்தீவுகள் குடியரசின் மாண்புமிகு அதிபர் திரு இப்ராஹிம் முகமது சோலிஹ், வெளியுறவு அமைச்சர்  மேன்மைதங்கிய திரு அப்துல்லா ஷாஹித்,  பாதுகாப்பு அமைச்சர் மேன்மைதங்கிய திருமதி மரியம் அகமது தீதி, ராணுவ தளபதி மேஜர் ஜென்ரல் அப்துல்லா ஷமால் ஆகியோரையும், அட்மிரல் ஹரிகுமார் சந்தித்தார். 

நீர்நிலை வரைபடம் குறித்த ஒத்துழைப்புக்கு  ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் கூட்டாக நீர்நிலை வரைபட ஆய்வினை மேற்கொள்ள மாலத்தீவுக்கு  சென்றிருக்கும் ஐ என் எஸ் சட்லஜ் கப்பலில் மாலத்தீவுகளில் தேசிய பாதுகாப்புப் படைகளின் தலைவரையும், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சரையும்  கவுரவிக்கும் வகையில் ஏப்ரல் 18 அன்று இவர்களுக்கு அட்மிரல் ஆர் ஹரிகுமார் விருந்தளித்தார்.  இந்தியாவும், மாலத்தீவுகளும் கூட்டாக தயாரித்துள்ள முதலாவது கடல்போக்குவரத்து சார்ந்த சாசனத்தை  கப்பற்படை தளபதி வெளியிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்ட மதிப்பு, பேச்சுவார்த்தை, ஒத்துழைப்பு, அமைதி, வளம் என்ற 5  கருத்துக்களை உள்ளடக்கிய தொலைநோக்கு பார்வையின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் கப்பற்படை தளபதியின்  பயணம் நெருக்கமான கடல் பகுதியை கொண்ட இந்தியா-மாலத்தீவுகள் இடையேயான நீண்டகால இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பட்டு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், பாதுகாப்பு மற்றும் கடல் பகுதி சார்ந்த இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிகளையும் இந்த பயணம் அடையாளம் காணும் என்று  கூறப்படுகிறது. 

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply