பாரதீப் துறைமுகத்தின் திட்டங்களை ஆய்வு செய்த மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால், 2030-ம் ஆண்டிற்குள் ஆண்டுக்கு 500 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சரக்கு கையாளும் திறனை அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
அமைச்சர் தமது முதலாவது அதிகாரப்பூர்வ பயணமாக ஒடிசாவில் உள்ள பாரதீப் துறைமுக ஆணையத்திற்கு கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி சென்றார். இந்த பயணத்தின் போது அமைச்சர் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள், மின்சார கொள்முதல் திட்டங்கள், துறைமுகத்தின் செயல்பாடு, வணிக முயற்சியை எளிதாக்குதல், பசுமை முன்னெடுப்புப் பணிகள் மற்றும் வர்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
ஒரு மணி நேரத்திற்கு 25 டிரக்குகளை ஸ்கேன் செய்யக்கூடிய வகையில் 29.68 கோடி ரூபாய் மதிப்பிலான கண்டெய்னர் ஸ்கேனர் பயன்பாட்டை திரு சோனோவால் தொடங்கி வைத்தார். இந்த கன்டெய்னர் ஸ்கேனர், சர்வதேச பாதுகாப்பு சோதனை தரநிலையின்படி, கரிம/கனிம பொருட்கள் மற்றும் உயர் செயல்திறன் இமேஜிங் திறனை வழங்குவதன் மூலம், கொள்கலன்களை ஆட்கள் மூலம் சோதனை செய்வதற்கான தேவையை குறைக்கிறது. இது துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்தை அதிகரிக்க உதவிடும்.
பாரதீப் துறைமுகத்தில், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து துறைமுகத்தை இணைக்கும் வகையில் கூடுதலாக, சாலை மேம்பாலத்துடன் கூடிய 2-வது வெளியேறும் வாயில் கட்டுமான பணிக்கு (கதி-சக்தி திட்டம்) அமைச்சர் அடிக்கல் நாட்டினார். 2.4 கிமீ நீளமுள்ள இந்த சாலை மற்றும் மேம்பாலம், துறைமுகத்திற்கு நுழையவும் / வெளியேறவும் மாற்று வழியாக பயன்படுவதுடன், பாதுகாப்பான மற்றும் நெரிசல் இல்லாத வகையில் வாகனங்களை இயக்க உதவுகிறது. 93 கோடி ரூபாய் செலவிலான இத்திட்டத்தின் மூலம், துறைமுக நகரிலிருந்து பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்தை பிரிக்க உதவும்.
இத்துறைமுக வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பாரதீப் கல்லூரி மாணவர் விடுதியையும் அமைச்சர் திரு சோனோவால் திறந்து வைத்தார்.
இத்துறைமுக வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பாரதீப் கல்லூரி மாணவர் விடுதியையும் அமைச்சர் சோனோவால் திறந்து வைத்தார். மூலிகைத் தோட்டம் அமைக்கும் நிகழ்ச்சியிலும் அமைச்சர் பங்கேற்றார்.
–திவாஹர்