மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உலகின் அறிவு மையமாக மாற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இதுவரை அணுக முடியாத மக்களை சென்றடைய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இன்றைய பட்டமளிப்பு விழா, மிகப் பெரிய நம்பிக்கை, ஊக்குவிப்பு என்று கூறிய அமைச்சர், பல்கலைக்கழகம் புதுமையான கற்பித்தலுக்கு உள்ள வாய்ப்புகளை பிரதிபலிப்பதாக தெரிவித்தார். தொலை தூர மூலைமுடுக்குகளில் வசிக்கும் பரம ஏழைகளுக்கு கல்வியை கொண்டு சேர்க்கும் நவீன கால அனுமனாக இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழகம் உருவெடுத்துள்ளது என்று கூறினார்.
21 ஆம் நூற்றாண்டு அறிவு நூற்றாண்டு என கூறிய திரு.பிரதான், இந்தியாவை அறிவு சார்ந்த பொருளாதார வல்லரசாக உருவாக்க விரும்புவதாகவும், அதற்கு நமது கல்வி முறையில் பெரும் மாற்றத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் கூறினார். நமது கல்வியையும், திறன்களையும் மாற்றியமைக்கும் ஒரு முக்கிய நடவடிக்கை தேசிய கல்விக் கொள்கை என்று அவர் குறிப்பிட்டார்.
‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணர்வுடன் உலக நன்மைக்காக நமது கல்வி முறையை முழுமையான ஆற்றல் நிறைந்ததாக மாற்ற வேண்டுமென்று திரு.பிரதான் வலியுறுத்தினார். தொழில்நுட்பம், புதுமை, இணையதளம், டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவது அவசியம் என்று குறிப்பிட்ட அவர் ஐஜிஎன்ஓயு கல்வியை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், கல்வி மற்றும் கற்பித்தலை விரிவுபடுத்தியுள்ள ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள், பணியாளர்கள் ஆகியோரை திரு.பிரதான் பாராட்டினார். கல்வி மற்றும் கற்றலை நீக்குப்போக்காக மாற்றி, படிக்கும் போதே பொருளீட்டுவதை ஊக்குவிக்கும் நோக்கத்தை நமது பல்கலைக்கழகங்கள் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
–எம்.பிரபாகரன்