ஜல் ஜீவன் இயக்க அமலாக்கத்தை விரைவுப்படுத்துவது குறித்து ராஜஸ்தான் மாநில பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறை அமைச்சர் மற்றும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று ஜெய்பூரில் ஆய்வு செய்தார்.
இந்த இயக்கத்தின் அமலாக்க வேகத்தை அதிகரிப்பதற்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதற்காகவும், தரமான பணிகளை உறுதி செய்ததற்காகவும், இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். உள்ளூர் மக்களின் பங்கேற்பும், அவர்களுக்கு அதிகாரமளித்தலும் இந்த இயக்கத்தின் உயிர்நாடியாகும் என்று குறிப்பிட்ட திரு ஷெகாவத், இதனால், கிராம செயல்திட்டம், தயாரிக்கப்படுவதிலிருந்து இந்த இயக்கத்தின் பணிகள் தொடங்கப்பட வேண்டும் என்றார்.
தொடர்ச்சியான ஆய்வு மற்றும் சரி செய்யும் நடவடிக்கைகளை உறுதி செய்வதன் மூலம், பணிகளின் தரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் மூத்த அதிகாரிகள் அனைவரையும் திரு.ஷெகாவத் கேட்டுக் கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய மாநில பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறை அமைச்சர், குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் புவியியல் ரீதியாகவுள்ள சவால்கள் பற்றி எடுத்துரைத்தார். மிகச் சிறிய அளவில், தொலைதூரத்தில் உள்ள குடியிருப்புகள் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.
2019-ல் இந்த இயக்கம் தொடங்கப்பட்டபோது, 11.74 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டதாகவும், தற்போது இந்த எண்ணிக்கை 25.61 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த 2022-23 நிதியாண்டில் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மத்திய அரசு ரூ.11,000 கோடியை மானியமாக வழங்கியுள்ளது.
–எஸ்.சதிஸ் சர்மா