தில்லியில் பகவான் மகாவீர் அதி சிறப்பு மருத்துவமனைக்குக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.

தில்லியில் பகவான் மகாவீர் அதி சிறப்பு மருத்துவமனைக்குக் குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று (மே 3, 2022) அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ஜைன பாரம்பரியம் சேவைக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினார். 250 படுக்கைகள் கொண்ட பகவான் மகாவீர் அதி சிறப்பு நவீன மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் 2023ஆம் ஆண்டுக்குள் பூர்த்தியடையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அதி சிறப்பு மருத்துவமனையில் உயர்ந்த தரத்திலான மருத்துவ சேவைகள் சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் குறைந்த செலவில் கிடைக்கவிருப்பதும் ஏழைகளுக்கு கட்டணமின்றி கிடைக்கவிருப்பதும் மகிழ்ச்சியான விஷயம் என்று அவர் தெரிவித்தார். பெருந்தொற்று காலத்தில் இந்த மருத்துவமனை கொவிட் கவனிப்புக்கான சேவைகளை வழங்கியதாக குறிப்பிட்டு அதற்கும் மகிழ்ச்சி தெரிவித்தார். கொவிட் என்பது முழுமையாக முடிந்து விடவில்லை என்று மக்களை அவர் எச்சரித்தார்.

விழிப்புடன் இருக்குமாறும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுமாறும் அனைத்துக் குடிமக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

முகக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த குடியரசுத் தலைவர், 1897-ஆம் ஆண்டின் நவீன வரலாற்று காலத்தில் மருத்துவ முகக்கவசங்கள் அறிமுகம் செய்யப்பட்டதை நாம் அறிவோம். அறுவை சிகிச்சை காலத்தில் கிருமிகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்கள் முகக்கவசங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் ஜெயின் துறவிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே முகக் கவசங்களின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தனர். தங்களின் வாய் மற்றும் மூக்கை மறைத்துக்கொள்வதன் மூலம் உயிரினங்களை அழிவிலிருந்து காத்தது மட்டுமின்றி தங்களின் உடலுக்குள் நுண்ணிய கிருமிகள் புகுவதிலிருந்தும் தடுத்துக் கொண்டனர். பெருந்தொற்று காலத்தில் வைரசுக்கு எதிரான பாதுகாப்பில் முகக்கவசங்கள் சிறந்த வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்டன. உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்த நடைப்பயிற்சிக்கு சமணத்துறவிகள் மிகுந்த முக்கியத்துவம் அளித்ததாக அவர் கூறினார். இந்தத் துறவிகளால் காட்டப்பட்ட அறிவியல் பாரம்பரியங்கள் அடிப்படையில் மனிதகுலத்திற்கு ஆரோக்கியமான பாதையை இந்த மருத்துவமனை அமைத்துக் கொடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜைனபாரம்பரியம் நமக்கு சமச்சீரான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை ஏற்பதற்குக் கற்றுத்தந்துள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். தற்போதைய

வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கமும் இயற்கைக்குப் பொருத்தமானதாக இல்லை. சமண துறவிகளும் அவர்களின் சீடர்களும் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டுமே உணவருந்தினார்கள் என்பதை நாம் அறிவோம். தினசரி சூரிய இயக்கத்தின்படி வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்வது ஆரோக்கியமாக வாழ்வதற்கு எளிதான வழியாகும். சமணத்துறவிகளின் சிறப்பான வாழ்க்கை முறையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் இதுவாகும். இத்தகைய அறிவியல் பாரம்பரியங்களை நவீன மருத்துவ முறைகளுடன் மருத்துவமனைகளில் ஒருங்கிணைத்தால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

திவாஹர்

Leave a Reply