சிறந்த சேவைக்காக அசாம் காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கலர்ஸ் கொடிவிருதை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா இன்று குவஹாத்தியில் வழங்கினார். அசாம் முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் காவல்துறையின் தலைமை இயக்குனர் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நாட்டின் உயரிய காவல்துறை விருதை பெறும் 10-வது காவல்படையாக அசாம் காவல்துறை திகழ்வது குறித்து பெருமிதமடைவதாக உள்துறை அமைச்சர் தமது உரையில் குறிப்பிட்டார். இந்த விருதை பெற்றதன் மூலம் அசாம் காவல்துறை பெருமைமிக்க பட்டியலில் சேர்ந்துள்ளது. அசாம் காவல்துறையின் 200 ஆண்டு கால பெருமிதம் மிக்க வரலாற்றை நினைவுகூர்ந்த அமித்ஷா, 1826-ம் ஆண்டு இந்த காவல்துறை பிரிட்டிஷ் ஆட்சியால் ஏற்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
அசாமில் தீவிரவாதம் முடிவுக்கு வந்துள்ளதை சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்த திரு அமித்ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அமைதி ஒப்பந்தங்களை ஒன்றன்பின் ஒன்றாக செய்து கொண்டதை குறிப்பிட்டார். தற்போது அசாமில் எந்தவித தீவிரவாத இயக்கமும் செயல்பாட்டில் இல்லை என்று அவர் கூறினார். தவறாக வழிகாட்டப்பட்ட இளைஞர்கள், தேசிய நீரோடையில் சேர்ந்து ஆயுதங்களை கைவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், அண்டை மாநிலத்துடனான எல்லைத்தாவாவுக்கு 70 ஆண்டுகள் குறித்து தீர்வு கிடைத்துள்ளதாக கூறினார்.
–எம்.பிரபாகரன்