மத்திய அரசின் அனைத்து ஆதரவும் தொழில்துறைக்கு வழங்கப்படும் என உறுதி அளித்த மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்றார்.
சென்னையில் இன்று நடைபெற்ற இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தங்கள் பற்றிய விழிப்புணர்வு விளக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்களுக்காக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தைப் பாராட்டினார். இந்த ஒப்பந்தங்கள் குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
“வணிக ஒப்பந்தங்களின் விவரங்கள் மற்றும் நன்மைகளை தமிழில் மொழிபெயர்த்து ஊடகங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு விநியோகிக்குமாறு அயல்நாட்டு வர்த்தக தலைமை இயக்குநரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்,” என்று அவர் மேலும் கூறினார். தமிழ்நாடு அரசின் ஏற்றுமதி கொள்கையின் பிரதியை தமிழக சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சரிடம் தாம் கேட்டிருப்பதாகவும், அதில் உள்ள சாதக-பாதகங்களை ஆய்வு செய்து ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மத்திய – மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மேம்படும் என்றும் அவர் கூறினார்.
அடித்தட்டு சவால்களைப் புரிந்துகொள்ளவும் தீர்வுகளைக் கண்டறியவும் இது போன்ற நிகழ்ச்சிகள் நமக்கு உதவுகின்றன என்று கூறிய திருமதி நிர்மலா சீதாராமன், தொழில்துறையின் குறைகளைக் கேட்கவும் அவற்றை நிவர்த்தி செய்யவும் மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றார்.
“மாண்புமிகு பிரதமர் எப்பொழுதும் கூறுவது போல், உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், தொழில்துறையுடன் துணை நிற்பதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.
நூல் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான கூட்டத்திற்கு வர்த்தக அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். வர்த்தக உடன்படிக்கைகள் குறித்த நிகழ்ச்சிகளில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சர் சென்றதை நிதி அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
தோல் துறையுடன் நீண்ட கால தொடர்பை தமிழகம் கொண்டுள்ளது என்றும் நவீனமயமாக்கலை அத்தொழில் எட்டியுள்ளது என்றும் கூறிய அமைச்சர், நீண்ட காலமாக வர்த்தகத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்றும் கூறினார். இந்த ஒப்பந்தங்களின் சிறப்பம்சங்களை அறிந்து அவற்றைச் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு தொழில்முனைவோரை அவர் வலியுறுத்தினார். “ஒப்பந்தங்கள் தொடர்பாக ஏதேனும் ஆதரவு உங்களுக்கு தேவைப்பட்டால், அதை எங்களிடம் தெரிவிக்கலாம்,” என்று அவர் கூறினார்.
“கொவிட்டுக்குப் பிறகு நுகர்வோரின் மாறிவரும் ரசனைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய தொழில்துறை தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக இருக்கும் சந்தைகளை இந்திய தொழில்கள் அணுக வேண்டும்,” என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றபோது, இந்தியாவில் 75 பில்லியன் மதிப்புள்ள முதலீடுகளை செய்ய அரச குடும்பம் உறுதியளித்தது. இப்போது முறையான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது என்று கூறிய திருமதி நிர்மலா சீதாராமன், முதலீடுகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு தொழில்முனைவோரைக் கேட்டுக்கொண்டார்.
”முதலீடு செய்ய மூலப்பொருள் தயாரிப்பாளர்களை அழைக்குமாறு மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன். நமது மூலப்பொருட்களுக்கு மற்றவர்களைச் சார்ந்திருக்கக் கூடாது,” என்றும் அவர் கூறினார்.
உள்கட்டமைப்பு குறித்து பேசிய திருமதி நிர்மலா சீதாராமன், “உள்கட்டமைப்புக்கான அனைத்து ஆதரவையும் மத்திய அரசின் சார்பாக நான் உறுதியளிக்கிறேன். இதற்காக ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புக்கு இன்னும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. தொழில் வளர்ச்சியை நாம்உறுதி செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களும் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: “மலிவு விலையில் 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய போதுமான மின்சாரத்தை உறுதி செய்ய நாம் அனைவரும் பாடுபடுவோம். அனைத்து மூலங்களிலிருந்தும் எரிசக்தி திட்டமிடலுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஒப்பந்தங்களை முழுமையாகப் பயன்படுத்த ஒவ்வொரு வணிகமும் முன்வர வேண்டும்.”
இந்தோ-பசிபிக் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் ஒப்பந்தம் முக்கியமானது. ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பல தடைகள் இருந்தாலும், அவற்றின் ஏற்றுமதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் நிதியமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சரின் ஆதரவின் கீழ், நாடு முழுவதும் உள்ள பங்குதாரர்கள் வர்த்தக ஒப்பந்தங்களைப் புரிந்து கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
இந்த 2 அதிமுக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு (ஐக்கிய அரபு நாடுகள், ஆஸ்திரேலியா) புரிந்துணர்வு ஒப்பந்தம் காரணமாக, இந்தியாவின் தொழில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி 400 பில்லியல் டாலராக இருந்து தற்போது 419 பில்லியனாக மாறியுள்ளது. தொழில்நிறுவனத்தைச் சேர்ந்தவர்களாகிய நீஙகளும் இந்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி பயனடைந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ வேண்டும். ஏற்றுமதியை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து ஆக்கப்பூர்வு நடவடிக்கைகளையும் மத்திய தொழில் வர்த்தகத்த அமைச்சகம் எடுத்து வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஏற்றுமதி-இறக்குமதி குறித்த பயிற்சியை தமிழகத்தில் முக்கிய 3 நகரங்களில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். “ஏற்றுமதியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலத்தில் நாம் இன்று இருக்கிறோம். ஆடை மற்றும் காலணித் துறையில் தமிழகம் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறது. ஏற்றுமதி ஊக்குவிப்பு கொள்கைக்காக தமிழக அரசை பாராட்டுகிறேன்,” என்றார் அவர்.
விழாவில் பேசிய மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்ததற்காக வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
”கடல்சார் துறையில் பெரிய அளவில் ஏற்றுமதிகளை நாம் செய்து வருகிறோம். வரலாற்றில் முதல்முறையாக, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா யோஜனா (பிஎம்எம்எஸ்ஒய்) திட்டத்தின் கீழ் மீன்வளத் துறைக்கு ரூ.20,000 கோடி நிதியமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்டது,” என்றார் அவர்.
நிதியமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனால் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.7500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்டர் முருகன் கூறினார். “இறால் உற்பத்தி மற்றும் பிற கடல் உணவு ஏற்றுமதியில் நாம் முன்னணியில் உள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்: கொவிட் சவால்களுக்கு இடையிலும், இந்திய கடல்சார் துறை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என்றும் இணை அமைச்சர் கூறினார். 2025ஆம் ஆண்டுக்குள் கடல் உணவு ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியைத் தொடும் என்றார் அவர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சிறு, குறு தொழில் துறை அமைச்சர் திரு டி எம் அன்பரசன், சென்னைக்கான ஆஸ்திரேலியா தூதர் டாக்டர் சாரா கிர்லேவ், பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் பங்கேற்றனர்.
–எஸ்.சதிஸ் சர்மா