திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்னை – மதுரை சாலையை இணைப்பதற்கு மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் துவங்கியது!- 7 ஆண்டு கால பிரச்சனைக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.

திருச்சி ஜங்ஷன் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது.

இந்நிலையில், திருச்சி மன்னார்புரம் பகுதியில் சென்னை – மதுரை சாலையை இணைப்பதற்கு மேம்பாலம் கட்டுவதில் சிக்கல் உருவானது. ஆம், இந்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இராணுவ நிலம் சுமார் 65 சென்ட் கையகப்படுத்துவதில் மிக பெரிய தடை ஏற்பட்டது.

மேம்பாலம் கட்டுவதற்கு எவ்வளவு இடம் தேவைப்படுகிறதோ; அதற்கு சமமான இடத்தை வழங்கினால் மட்டுமே; இந்திய பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான இடத்தை மேம்பாலம் கட்டுவதற்கு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும் என, இந்திய பாதுகாப்புத்துறை மிகவும் கண்டிப்பாக கூறிவிட்டது.

இதனால் இந்த மேம்பாலம் இணைப்புப் பணி பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

கடந்த காலங்களில் நடந்து முடிந்த பல தேர்தல்களில் இந்த மேம்பாலம் இணைப்புப் பணி அரசியல் கட்சி வேட்பாளர்களின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாகவே மாறிப்போனது.

இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழக சிறப்பு காவல் படை முதலாம் அணியில் உள்ள 65 சென்ட் நிலத்தை இந்திய பாதுகாப்பு துறைக்கு வழங்கி விட்டு, அதற்கு பதிலாக இந்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான இராணுவ இடத்தில் பாலம் கட்டுமான பணியை தொடங்குவதற்கான மாற்று திட்டத்தை மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி பாதுகாப்பு துறையின் அனுமதிக்காக டெல்லிக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பி வைத்தது.

இதற்கிடையில் கொரோனா பெருந்தொற்று பேரிடர் காரணமாக இப்பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த மேம்பாலம் இணைப்புப் பணிக்கான மரங்களை வெட்டி சுத்தம் செய்யும் பணி இன்று (11/05/2022) காலை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக இருந்து வந்த இப்பிரச்சனைக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது.

இந்த மேம்பாலம் கட்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டதற்கு நாங்கள்தான் முக்கிய காரணம் என்று உரிமை கொண்டாடி, அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களும் மீண்டும் போஸ்டர் மற்றும் பேனர் யுத்தம் தொடங்கி விடுவார்கள். அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply