உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தன்னம்பிக்கையோடு அடுத்தக் கட்டத்தை எதிர்கொள்ள வேண்டும்!- மதிமுக தலைமைக் செயலாளர் துரை வைகோ அறிக்கை.

இந்தியாவில் இருந்து எண்ணற்ற மாணவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று மருத்துவப் படிப்பை மேற்கொள்கிறார்கள். அந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று ஆகும்.

ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக, உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் மிகுந்த அச்சத்திற்கு இடையே நாடு திரும்பி இருக்கின்றார்கள். அதில், தமிழ்நாட்டு மாணவர்களும் அடங்குவர்.போர் மேகங்கள் சூழ்ந்திருந்த போதும் நம் மாணவர்கள் உயிரோடு தாயகம் திரும்பியிருப்பது நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால், மருத்துவ மாணவர்களும் பெற்றோர்களும் மிகுந்த கவலையிலும், எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற பயத்திலும் தற்போது இருந்து வருவதை உணர முடிகின்றது.

காரணம், பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு தங்கள் ஊர்களுக்கு திரும்பி இருக்கிறார்கள். நான்காம் வருடம் படித்துக் கொண்டு இருந்தவர்கள்; அதைப்போல, மூன்றாம் வருடம், இரண்டாம் வருடம் படித்து கொண்டு இருந்தவர்களும், முதல் வருடத்தில் படிப்பை தொடங்கிய நிலையில் இருந்தவர்களும் தற்போது, அடுத்த என்ன செய்ய போகிறோம் என்ற கேள்வியை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

உக்ரைனில் மருத்துக்கல்லூரியில் பயின்று வந்த டிம்பிள் என்ற மாணவி தற்போது, நான்காம் வருடத்தில் படித்து வருகிறார். மூன்றாம் ஆண்டின் இறுதி பருவத்திலேயே அவருக்கான மருத்துவப் பயிற்சிகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், போர் காரணமாக நேரடி பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்பை இழந்து, அவர் தனது சொந்த ஊருக்கு திரும்பி விட்டார். தற்போது, இணைய வழியில் பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டு இருக்கிறார் என்ற செய்தியை, ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் படித்து அறிந்தேன்.

மருத்துவ பயிற்சி என்பது, மருத்துவம் பயின்று வரும் மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணம் ஆகும். நேரடி பயிற்சிகளை பெறுவதன் மூலமே அவர்கள் தங்களை முழு மருத்துவர் ஆக்கிக் கொள்ள முடியும்.

வெளிநாடுகளில் படித்து பாதியிலேயே நாடு திரும்பி இருக்கும் மாணவர்களின் நிலையை உணர்ந்த உச்சநீதிமன்றம், சமீபத்தில் மருத்துவ ஆணையத்திற்கு ஒரு திட்டத்தை உருவாக்க உத்தரவிட்டு உள்ளது. இறுதி ஆண்டு படித்துக் கொண்டு இருக்கும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இந்தியாவிலேயே உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி இருக்கின்றது.

உக்ரைனில் இருந்து நாடு திரும்பி இருக்கும் இந்திய மாணவர்கள், குறிப்பாக தமிழக மாணவர்களுக்கு மேற்கொண்டு தங்கள் படிப்பை, பயிற்சியை உக்ரைனிலேயே தொடரக் கூடிய சூழல் விரைவில் வருமா என்பது தெரியவில்லை. இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அவர்களின் படிப்பை தொடர்வதற்கு உரிய நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. நம் கோரிக்கையும் அது தான்.

ஆனபோதும், சூழலுக்கு தகுந்தாற்போல் மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். படிப்பாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும், ஒரு வேலையாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும் நாம் திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றால், அதற்கு ஒரு மாற்று திட்டத்தை எப்போதும் வைத்திருக்க வேண்டும். அதைத்தான், ஆங்கிலத்தில் ‘PLAN B’ என்று சொல்வார்கள். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு என் அறிவுரையும் அது தான். நீங்கள் நினைத்தது நடக்காத போது, அடுத்த மாற்று என்ன என்பதை திட்டமிடுங்கள். எதையும், எதிர்மறையாக நினைத்து வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணி வருந்தாதீர்கள்.

கழகத் தோழர்களின் வீடுகளிலும் உக்ரைனில் படிப்பை தொடர முடியாமல் வந்து இருக்கும் நிறைய மாணவர்களை பார்க்கிறேன். அவர்களுக்கும் சொல்கிறேன். நம்பிக்கை இழக்காதீர்கள்.’இந்த வருடம் தான் உக்ரைனுக்கு படிக்கச் சென்றேன். முதல் வருடம் தான் பயின்று வந்தேன்’ என்ற நிலையில் இருக்கும் மாணவர்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் நீட் போன்ற தேர்வுகளை எழுதி இங்கேயே உங்கள் படிப்பை தொடர முயற்சி செய்யுங்கள். இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டுகளில் பயின்று வந்த மாணவர்கள் இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு மருத்துவப் படிப்பை தொடர முடியுமா என முயற்சி செய்யுங்கள்.

ஆகவே, மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போய்விடுமோ? வாழ்க்கையே அவ்வளவுதானோ? என்று விரக்தி அடையாதீர்கள்.
மருத்துவம் படித்து விட்டு,அதற்கு தொடர்பே இல்லாத வேறு துறைக்கு சென்று அதில் முன்னேறியவர்களையும், மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். எனக்கும் அப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள்.எந்தத் துறையிலும் சாதிக்கலாம். உயரலாம். தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் வேண்டும். அவ்வளவு தான்..!

இவ்வாறு மதிமுக தலைமைக் செயலாளர் துரை வைகோ தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

–சி.கார்த்திகேயன்

Leave a Reply