இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கடத்திச் செல்லப்படுவதும் அவ்வப்போது நடைபெறுகிறது.
அந்த சமயங்களில், இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட கோரியும், மீனவர்களை மீட்கக் கோரியும் மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடிதங்கள் எழுதுகிறார்.
இதை இலங்கை அரசு விமர்சித்து உள்ளது. இலங்கை அரசின் பாதுகாப்பு துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதங்கள் எழுதுவது குறித்து, ஆட்சேபகரமான புகைப்படத்துடன் அவதூறான கருத்துகள் வெளியாகி இருந்தன.
இதனால் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இலங்கை அரசின் இந்த விஷமத்தனமான நடவடிக்கையை அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். இலங்கை அரசுடனான உறவை, மத்திய அரசு துண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.
இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல ஊர்களில் அ.இ.அ.தி.மு.க.வினர், இலங்கை அதிபர் ராஜபக்சேயின் உருவபொம்மையை எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை கிளப்பப்பட்டது.
இதற்கிடையே, இலங்கை அரசின் செயல்பாடு குறித்து தனது ஆட்சேபத்தை தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 01.08.2014 ஒரு கடிதம் எழுதினார்.
அதில், இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியாவின் அதிருப்தியை தெரிவிக்க வேண்டும் என்றும், மேலும், இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கியது. அதன்பேரில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், இந்த பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றது. இதனால் ராஜபக்சே அரசு பணிந்தது. அந்த சர்ச்சைக்குரிய கட்டுரையை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்கியது. அதுமட்டுமின்றி நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.
மன்னிப்பு கோரி இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரை பற்றி, கிராபிக்ஸ் செய்யப்பட்ட படங்களுடன் எங்கள் இணைய தளத்தில் ஒரு கட்டுரை வெளியாகி விட்டது. இந்த கட்டுரை அதற்கான முறையான அங்கீகாரம் இன்றி வெளியிடப்பட்டு விட்டது. அது இலங்கை அரசின் ராணுவ அமைச்சகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டினை பிரதிபலிக்கவில்லை. எனவே, அது நீக்கப்பட்டு விட்டது.
இதை வெளியிட்டதற்காக நாங்கள் இந்திய பிரதமரிடமும், தமிழ்நாட்டின் முதலமைச்சரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.