ராம்பன் பனிஹால் பிரிவின் டிக்டோல் மற்றும் கூனி நல்லா இடையே உள்ள பகுதி அடிக்கடி நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்து வானிலைக்கும் ஏற்ற வகையிலான சுரங்கங்கள் மூலம் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மலைச் சரிவுகளின் உறுதித்தன்மையை உறுதி செய்வதில் உள்ள சவால்களை மதிப்பீடு செய்த பிறகு, ராம்பன் பனிஹால் பிரிவில் 3 தொகுப்புகளின் கீழ் சுரங்கங்கள்/வழிப்பாதைகள் முன்மொழியப்பட்டுள்ளன. ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் டிக்டோல் முதல் பந்தியல் வரையிலான 4-வழிப்பாதையில், இரட்டைக் குழாய் சுரங்கப்பாதை பணியானது படேல் இன்ஜினியரிங் லிமிடெட் உடன் இணைந்து சிகால் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் பிப்ரவரி 1, 2022 அன்று தொடங்கியது.
19.05.2022 அன்று இரவு 10.30 முதல் 11 மணி வரை, கூனி நல்லாவில் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கற்கள் பெயர்ந்து விழுந்தன. தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு முன், திடீரென பெரிய பாறைகள் கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்ட போலி எஃகு போர்ட்டலுக்கு மேலே விழுந்தது, இது அந்த இடத்தில் 12 தொழிலாளர்கள் சிக்குவதற்கு வழிவகுத்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய மூத்த அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தை அடைந்தனர். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரால் உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
இரண்டு தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்; மேலும் அவர்களுக்கு சாத்தியமான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படுகின்றன. இடிபாடுகளில் சிக்கிய மற்ற தொழிலாளர்கள் உயிர் பிழைக்கவில்லை, நேற்று மாலைக்குள் சிக்கியிருந்த 10 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. உயிரைக் காப்பாற்ற முடியாதவர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும் கூடுதல் கருணைத் தொகையாக குறைந்தது 15 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், யூனியன் பிரதேச நிர்வாகம் ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது.
சரிவுக்கான காரணங்கள் மற்றும் அதற்கான தீர்வு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய அரசால் 3 வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே இதுபோன்ற அவசரகாலச் சூழலைக் கையாள்வதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
–திவாஹர்