காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை விஷம் ஊற்றி கொன்றதாக புகார்!-திருவெறும்பூர் அருகே உறவினர்கள் சாலை மறியல்!-போலீசார் தடியடி..!

வித்யா லட்சுமி (வயது 19)

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் வித்யாலட்சுமி (வயது 19) இவர் துவாகுடி பெரியார் மணியம்மை நகரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கி, திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு (B.com) படித்து வந்தார்.

மேலும், இவருக்கு வயிற்று வலி மற்றும் சோர்வு  இருந்து வந்த நிலையில்  உடல்நிலை சரியில்லாமல் திருச்சி கண்டோன்மென்ட் காவேரி மருத்துவமனையில் 17.05.2022 அன்று இரவு அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக கேட்கும் போது கடந்த (12.05.2022) மாலை 06:30 மணியளவில் கல்லூரி முடித்து திரும்புகையில் பிளக் தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் இறங்கி மணியம்மை நகர் டவுன்ஷிப் பகுதிக்கு சென்றபோது  அடையாளம் தெரியாத மூன்று பேர்  குளிர்பானத்தில் விஷமருந்து கலந்து அவருக்கு கட்டாயப்படுத்தி கொடுத்ததாகவும், அதனை குடித்ததாகவும், அதிலிருந்து தனக்கு உடல் நிலை சரியில்லை என கூறியுள்ளார்.

இந்நிலையில், வித்யாலட்சுமி தனியார் மருத்துவமனையில் இருந்து 21.05.2022-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த வித்யாலட்சுமி சிகிச்சை பலனில்லாமல் நேற்று 22.05.2022 மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது சம்பந்தமான குற்றவாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்யகோரி உயிரிழந்த மாணவி வித்யாலட்சுமியின் உறவினர்கள் இன்று (23.05.2022) திருச்சி திருவெறும்பூர் மலை கோவில் அருகே திருச்சி -தஞ்சை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலை மறியல் போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் போக்குவரத்தை சீர் செய்வதற்காக போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply