வரலாற்று சிறப்பு மிக்க திருச்சி டவுன் ஹால் இராணி மங்கம்மாள் மஹால் வளாக பகுதியை தார் சாலை அமைத்து தூய்மையாக பராமரிக்க வேண்டும்!

திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம், இராணி மங்கம்மாள் மஹால்.

தமிழ்நாட்டின் மைய பகுதியாகவும், திருச்சிராப்பள்ளி மாநகரத்தின் இதயமாகவும் விளங்கும் மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோயிலுக்கு மிக அருகாமையில் திருச்சிராப்பள்ளி சிங்காரதோப்பு பகுதியில் “இராணி மங்கம்மாள் மஹால்” (டவுன் ஹால்) அமைந்துள்ளது. இது மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரால் கட்டப்பட்டது.

1616 -ல் இருந்து 1634 வரையும், பின்னர் 1665 ல் இருந்து 1731 வரையும், இது மதுரை நாயக்கர்களின் தர்பார் ஹாலாக இருந்தது.

இங்கு திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம் (Government Museum, Tiruchirappalli) அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் நிலவியல், விலங்கியல், ஓவியங்கள், மானுடவியல், கல்வெட்டியல் மற்றும் வரலாறு தொடர்பான காட்சிகள் வரிசை படுத்தப்பட்டுள்ளன.

இந்த அருங்காட்சியகத்தில் 2000 பொரு‌ட்க‌ள் உட்புற மற்றும் வெளிப்புற காட்சிகளாக கொண்டுள்ளது. உட்புற காட்சிகளில் சில பெருங்கற்கள் சிற்பங்கள், சிற்பங்கள், கற்கால கல்வெட்டுகள், இசைக்கருவிகள் வாசித்தல், கருவிகள், நாணயங்கள் மற்றும் சோழ சகாப்த நாணயங்கள், ஓவியங்கள் போன்ற வரலாற்றுகால தொல்பொருள்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்கு அரிய வரலாற்று ஆவணங்கள், பனை ஓலைச் சுவடிகள், படிமங்கள்,ஹைதர் அலி பயன்படுத்தப்படுத்திய ஆயுதம் மற்றும் பீரங்கி குண்டுகள், ஆரம்ப நாட்களில் பி.எச்.இ.எல் நிறுவனம், ஸ்ரீரங்கம் மாதிரி, மலைக்கோட்டை மாதிரி மற்றும் தபால்தலை சேகரிப்பு பொருட்கள் ஆகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

வெளிப்புற பூங்காவில் கற்களாலான விக்கிரகங்கள், சிற்பங்கள் ஆகியவை உள்ளன. வெளிப்புற பூங்கா 17 ஏப்ரல் 2012 அன்று திறக்கப்பட்டது. பலிகொடுக்கும் பலிபீடம், கல் நந்தி மற்றும் லிங்கங்கள் உட்பட 18 ஆம் நூற்றாண்டு மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்த சுமார் 45 சிற்பங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் அரிய பூச்சிகள், பறவைகள் மற்றும் பாலூட்டிகள் ஆகியவற்றின் தொகுப்பு இடமாக சூழலியல் பிரிவு உள்ளது.

இந்த அருங்காட்சியகம் முதலில் திருச்சிராப்பள்ளி கண்டோன்மெண்ட் பகுதியில் 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.. பின்பு 1997 -ல் இராணி மங்கம்மாள் மஹாலுக்கு இது மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகம் பொதுப்பணித் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்த வளாகத்தில் உள்ள கோட்டை கட்டிடங்களில் வட்ட வருவாய்த்துறை அலுவலகம், திருச்சி மாநகர கோட்டை காவல் நிலையம், திருச்சி 3-ம் எண் சார் பதிவாளர் அலுவலகம், மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆன்மீகத்தின் அடையாளமாகவும், வரலாற்று சிறப்புமிக்க இடமாகவும் திகழும் திருச்சி மலைக்கோட்டைக்கு வருகை தரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் மறக்காமல் இந்த ராணி மங்கம்மாள் மஹால் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியத்தை பார்ப்பதற்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இப்படி வரலாற்று சிறப்புமிக்க இந்த ராணி மங்கம்மாள் மஹால் வளாகப்பகுதி பல ஆண்டுகளாக தார் சாலை அமைக்கப்படாமல் கரடு முரடாகவும்; மேடு பள்ளமாகவும் இருந்து வருகிறது.

எனவே, இப்பகுதி முழுவதும் புதிதாக தார் அல்லது சிமெண்ட் சாலை அமைத்து இந்த வளாகம் முழுவதையும் தூய்மையாக பராமரிப்பதற்கு சம்மந்தப்பட்ட துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் உத்தரவிட வேண்டும்.

ஏனென்றால், வாழுகின்ற மக்களுக்கு வாழந்தவர்கள் பாடம்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply