கல்லணையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!-அவசர போலீசுக்கு தகவல் கொடுத்த நபரை மிரட்டி அச்சுறுத்திய தோகூர் போலீசார்!

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு மிக அருகாமையில், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், தோகூர் கிராமத்தில் கல்லணை அமைந்துள்ளது. இந்த அணை கரிகால சோழ மன்னரால் 1 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது. இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

வரலாற்று சிறப்புமிக்க கல்லணையின் பராமரிப்பும், பாதுகாப்பும் மிக மோசமாக இருந்து வருகிறது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் பெருத்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

கல்லணைக்கு தனியாக தனிமையில் வரும் காதல் ஜோடிகளை மிரட்டி அச்சுறுத்தி நகை, பணம் மற்றும் செல்போன்களை சமூக விரோதிகள் சிலர் பறித்து வருகின்றனர். உயிருக்கு பயந்து வேறு வழியில்லாமல் நகை, பணம் மற்றும் செல்போன்களை பறிகொடுக்கும் காதல் ஜோடிகள், இந்த விசியம் வெளியில் தெரிந்தால் தங்களது எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதாலும் , மேலும் இந்த விவகாரம் வீட்டிலுள்ள தங்களது பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கு தெரிந்துவிடும் என்பதாலும், இது குறித்து அவர்கள் எந்த புகாரும் தெரிவிப்பதில்லை. இது குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது.

மேலும், திருச்சி -கல்லணை சாலையில் பூசைப் படித்துறையில் இருந்து தோகூர் அண்ணா வளைவு வரை காட்டுப் பகுதியாக இருப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. இவற்றையெல்லாம் கண்காணித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய அப்பகுதி எல்லைக்குட்பட்ட காவல் துறையினர் இதைப்பற்றி எதுவும் கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில், இன்று (29.05.2022) மாலை ஐந்து மணி முதல் ஆறு முப்பது மணி வரை கல்லணை பாலத்தில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். கல்லணை மணி மண்டபத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தோகூர் காவல் நிலையம் இருந்தும் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், குடும்பத்தோடு சுற்றுலா வந்த நபர் ஒருவர் அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கண்டு உடனே அவசர போலீஸ் எண்100 க்கு தகவல் தெரிவித்தின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தோகூர் காவல் நிலையத்தை சேர்ந்த 2 போலீசார், எதற்காக 100-க்கு போன் செய்தீர்கள்? என்று கேட்டதோடு, மிரட்டி அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக அவரது செல்போனை பிடுங்கி போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக அவர் எடுத்து வைத்திருந்த படங்கள் மற்றும் வீடியோக்களை டெலிட் செய்ததோடு அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசல் சம்பந்தமாக அவசர போலீசுக்கு தகவல் கொடுத்த நபரை பாராட்டுவதை விட்டுவிட்டு, இப்படி மிரட்டி அச்சுறுத்துவது எந்த வகையில் நியாயம்?

எனவே, தங்கள் கடமையை சரிவர செய்யாமல் இருந்ததோடு, அவசர போலீசுக்கு தகவல் கொடுத்த நபரை மிரட்டி அச்சுறுத்திய மேற்படி தோகூர் காவல் நிலைய போலீசார் மீது சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவிட வேண்டும்.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply