மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுங்கள்!-அரசுத் துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளாக ஆலோசனை!

ஏழை எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில், எந்தவிதமான தொய்வும், தாமதமும் இன்றி பணியாற்ற வேண்டும்’ என, அரசு துறை செயலர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவுரை வழங்கினார்.

அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடு, அரசு அறிவிப்புகளின் தற்போதைய நிலை ஆகியவை குறித்து, அரசுத் துறை செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடனான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், இரண்டு நாட்களாக நடக்கிறது.

நேற்றைய கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: திட்டங்களை வகுப்பதிலும், நிறைவேற்றுவதிலும், அரசு சாராத துறை வல்லுனர்களின் கருத்துகளை, ஆலோசனைகளை பெறலாம். பிற மாநிலங்களில், பிற நாடுகளில், இதுபோன்ற திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப் படுகின்றன என்பதையும், நம் மக்களுக்கு எவ்வாறு சிறப்பாக அவற்றை வழங்கலாம் என்பதையும் கண்டறிய வேண்டும்.

ஆண்டாண்டு காலமாக செய்து வருவதையே, தொடர்ந்து செய்தால், புதிய முன்னேற்றங்கள் மாற்றங்கள் ஏற்படாது. அரசாணை வெளியீடு, திட்ட செயலாக்கத்தின் முதல்படிதான். போதுமான நிதி ஒதுக்கீட்டுடன், அரசாணைகள் வெளியிட்ட பின், துறைத் தலைவர்கள் எவ்வித தாமதமுமின்றி நடைமுறைப்படுத்தி, மக்களிடம் திட்டங்களின் பயன்களை சேர்ப்பது மிக முக்கியம்.

அதிலும் மிக முக்கியமானது, கள அளவில் ஆய்வுகள் மேற்கொள்வது. தேவையான இனங்களில், மக்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.ஒவ்வொன்றிலும் மாவட்ட கலெக்டர்களை ஈடுபடச் செய்து, அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும்.கணினி தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி, தேவையான சான்றிதழ்கள் தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

எந்த திட்டமாக இருந்தாலும், அனைவரும் ஒரே அர்ப்பணிப்பு உணர்வுடன், அதை செம்மையாக மக்களிடம் சேர்க்க வேண்டும். இந்த உயர்ந்த எண்ணத்துடன், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, முதல்வர் பேசினார். கூட்டத்தில், தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் துறை செயலர்கள் பங்கேற்றனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply