இந்தியா – செனகல் இடையே, கலாச்சார பரிமாற்றம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மூன்றுநாள் நாடுகளுக்குப் பயணம் சென்றுள்ள இந்திய குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு நேற்று செனகல் சென்றடைந்தார். தலைநகர் டக்கர் விமான நிலையத்தில் அவரை, செனகல் வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி. ஐசதா டால் சால் வரவேற்றார். இருநாடுகளிடையே அரசியல் ரீதியாக 60 ஆண்டுகள் உறவு நீடித்து வரும் நிலையில், செனகலுக்கு இந்திய உயர்நிலைத் தலைவர் ஒருவர் மேற்கொண்டுள்ள முதல் பயணம் இதுவாகும்.

தலைநகர் டக்கரில், திரு.வெங்கய்யா நாயுடுவுடன், செனகல் அதிபர் திரு.மேகே சால், மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செனகலின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என செனகல் அதிபர் மேகே சாலுக்கு, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு உறுதியளித்தார்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, பல்வேறு துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. தூதரக மற்றும் பணி தொடர்பான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு விசா இல்லாத நடைமுறையை கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தம், 2022-26 ஆண்டு காலத்தில் இருநாடுகளிடையேயான கலாச்சார பரிமாற்றத் திட்டத்தை புதுப்பித்தல் மற்றும் இருநாடுகளிடையே இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான செனகல், ஜனநாயக நாடுகளில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதனை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான, இந்ந விவகாரத்தில் செனகலின் வெற்றியை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவை இருநாடுகளிடையேயான நட்புறவுக்கு அடித்தளமாக உள்ளதாகவும் வெங்கய்யா நாயுடு கூறினார்.

கொவிட்-19 பெருந்தொற்று அச்சுறுத்தல் இருந்தபோதிலும், இந்தியா – செனகல் இடையே வர்த்தகம் 37 சதவீதம் அதிகரித்து 15 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறித்து குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது, சுகாதாரம், விவசாயம், எரிவாயு, ரயில்வே, எண்ணெய், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை வலுப்படுத்த வெங்கய்யா நாயுடு செனகலுக்கு அழைப்பு விடுத்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply