திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம், மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புரவலர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி கல்வி புரவலர்கள் சேர்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1000 முதல் 25000 வரை செலுத்தி புரவலர்களாக இணைந்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
புரவலர் சேர்க்கை பணம் ரூ.1 இலட்சத்து 62 ஆயிரம் இறையூர் இந்தியன் வங்கியில் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் நடந்த பாராட்டு விழாவுக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அன்பு தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணுப்பிள்ளை, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மீனா சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி கலந்து கொண்டு புரவலர்களாக இணைந்தவர்களை பாராட்டி பெயர் பலகை திறந்து வைத்து பேசியதாவது,
மேல்பென்னாத்தூர் பள்ளியில் 86 கல்வி புரவலர்களை இணைத்து இருப்பது பாராட்டுக்குரியது. மாவட்டத்தில் ஒவ்வொரு பள்ளியும் புரவலர்களை இணைத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும். காந்தியடிகள் வழியில் அன்பும், அஹிம்சையும் பின்பற்றினால் வாழ்க்கையில் முன்னேறலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் நல்ல முன்மாதிரி பள்ளியாக இப்பள்ளி திகழ்ந்து கொண்டு இருக்கிறது.
விழாவில் செங்கம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் லோகநாயகி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் சுபகோவிந்தராஜன், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் செங்கம் கல்யாணசுந்தரம், புதுப்பாளையம் மனவாளன், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மாணிக்கம், பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன், சங்கீதா, தனலட்சுமி, பரணி, நாராயணன், ஜோதி, ரேகா, அமலி ஜெரினா, உடற்கல்வி ஆசிரியர் சரவணகுமார் மற்றும் மாணவ, மாணவிகள் ஊர் பொது மக்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியில் ஆசிரியர் குணசேகரன் நன்றி கூறினார்.
-செங்கம் மா. சரவணக்குமார்.