திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு சில வியாபாரிகள், பிரதான சாலை ஓரங்களை ஆக்கிரமித்து தொழில் செய்து வருவதால், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்காண மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர்கள், அவசர நிமித்தமாக மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள்…இப்படி பல்வேறு பணிகளுக்காக அவ்வழியாக செல்லும் அனைத்து தரப்பு மக்களும், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
இது நீண்ட காலமாக இருந்து வரும் தீர்க்கப்படாத சிக்கலானப் பிரச்சனையாகும். இதற்கு தீர்வு காணவேண்டிய மாநகராட்சி நிர்வாக அதிகாரிகளும், திருச்சி மாநகரக் காவல்துறையினரும் தங்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக கை கட்டி மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு நிரந்தர தீர்வு வேண்டி இதுக்குறித்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு, விரிவான புகார் ஒன்றை கடந்த மார்ச் மாதம் அனுப்பி இருந்தோம்.
புகார் செய்யும் தருணங்களில் மட்டும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதும், மற்ற நேரங்களில் அமைதியாகி விடுவதும் மாநகர போலீசாரின் வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் திருச்சி காந்தி மார்கெட் சப் ஜெயில் ரோட்டில் உள்ள வெங்காய தரகு மண்டியில், திருச்சிராப்பள்ளி மாநகர போலீசார் போக்குவரத்தை நெரிசலை சரி செய்வதற்காக, அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் வெங்காய தரகு மண்டி வியாபாரிகளின் கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த, விவசாயிகளின் வெங்காய மூட்டைகளை அதிரடியாக தூக்கி காவல்துறை வண்டியில் ஏற்றினார்கள். இதனால் பதறிப்போன வெங்காயம் கொண்டு வந்த விவசாயிகள், இது வியாபாரிகளுக்கு சொந்தமான வெங்காயம் இல்லை. இது நாங்கள் விற்பனைக்காக கொண்டு வந்த வெங்காயம், இன்னும் ஏலம் விடவில்லை. எனவே, வெங்காயம் எங்களுடையது, தயவு செய்து கொடுத்து விடுங்கள் என்று, காவல் துறையினரிடம் விவசாயிகள் கண்ணீர் வடித்தனர்.
ஆனாலும், காவல் துறையினர் அவர்களின் வேண்டுகோளை ஏற்காமல் வெங்காயத்தை போலிஸ் வண்டியில் ஏற்றினர். இதை வெங்காய மண்டி வியாபாரிகள் வேடிக்கை பார்த்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
சாலையை ஆக்கிரமித்து வியாபாரிகள் தொழில் செய்கிறார்கள் என்றால் அதை அப்புறப்படுத்தி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் காவல் துறைக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் இருக்கிறது. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால், தொலை தூரத்தில் இருந்து ரத்தத்தை வியர்வையாக நிலத்தில் சிந்தி பாடுபட்டு கொண்டு வரும் விவசாயிகளின் விளைபொருட்களை அநியாயமாக அபகரித்து வண்டியில் ஏற்றி செல்வது எந்த வகையில் நியாயம்?
மேலும்,வெங்காய மண்டி வியாபாரிகளுக்கு என்றே அதற்கான தனியிடம் திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் (திருச்சி அப்போலா மருத்துவமனை எதிர்புறம் அருகில்) பல ஆண்டுகளுக்கு முன்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதை தற்போது வெங்காய தரகு மண்டி வர்த்தக சங்கம் என்ற பெயரில் லாரிகள் நிறுத்தம் செய்வதற்கு வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வருகிறார்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள வெங்காய தரகு மண்டியை அதற்கென்று ஒதுக்கப்பட்ட திருச்சி -சென்னை பைபாஸ் சாலையில் உள்ள அந்த இடத்திற்கு மாற்றினாலே, காந்தி மார்க்கெட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் சரியாகிவிடும்.
மேலும், காந்தி மார்க்கெட் பகுதியில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி திறிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதையெல்லாம் திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதே கிடையாது. இவர்களின் அலட்சியப் போக்கால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in