வாழ்க்கைச்சூழல், சுற்றுச்சூழல், வளர்ச்சி ஆகியவற்றிற்கிடையே சமநிலையை பராமரிப்பது குறித்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார். 2070க்குள் கரியமலவாயு வெளியேற்றத்தை முற்றிலும் தடுப்பதற்கான செயல் திட்டம் குறித்த “தொழில் துறையில் கரியமலவாயு வெளியேற்றத்தை நிறுத்துவதற்கான உச்சிமாநாடு 2022 (ஐடிஎஸ்- 2022) – தொடக்க நிகழ்வில் பேசிய அவர், மின்சார பற்றாக்குறையை சரி செய்ய மாற்று எரிபொருள்களை உருவாக்குவது அவசியம் என்றார். இந்த விஷயத்தில் உணர்ச்சி வயப்பட்ட ஒருதலைப்பட்சமான அணுகுமுறை நாட்டுக்கு பயன்தராது என்று அவர் கூறினார்.
வரும் நாட்களில் நமது பொருளாதாரத்தை நாம் வலுப்படுத்த வேண்டியுள்ளது. அதே சமயம், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியுள்ளது என்று கட்கரி தெரிவித்தார். பசுமை ஹைட்ரஜன் நமது முன்னுரிமை என்று கூறிய அவர், உயிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் உயிரின உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும். இதன் மூலம் நாம் உயிரி- எத்தனால், உயிரி திரவ எரிவாயு, உயிரி – அழுத்தப்பட்ட எரிவாயு ஆகியவற்றை உருவாக்க முடியும் என்றார். மெத்தனால் மற்றும் எத்தனால் பயன்படுத்துவதால் மாசு குறையும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கான செயல் திட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் போதிய ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறிய அமைச்சர், இதன் மூலம் நமது இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகப்படுத்தலாம் என்றார்.
திவாஹர்