இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் நேற்று (19.09.2014) மாலை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மீனவப் பிரதிநிதி நல்லதம்பி என்பவர் இந்த புகார் மனுவை அளித்துள்ளார்.அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நான் பாரம்பரிய மீனவக்குடும்பத்தை சார்ந்தவன். சொந்தமாக விசைப்படகு வைத்து எனது குடும்பத்தினர் தொழில் செய்து வருகிறார்கள். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை கடற்படையினரால் சுடப்பட்டு இறந்துள்ளனர்.
மீனவர்கள் தொடர்பில் சுப்பிரமனியன் சுவாமி கூறிய கருத்து, ராமேஸ்வரம் பகுதியிலுள்ள மீனவர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசில் எவ்வித பொறுப்பிலும் இல்லாத சுப்பிரமணியன் சுவாமி, இந்திய அரசிற்கு விரோதமாக இலங்கைக்குச் சென்று, இந்திய குடிமக்களாகிய தமிழக மீனவர்களுக்கு எதிரான கருத்தைத் தெரிவித்து தேசத்துரோகக் குற்றத்தை புரிந்துள்ளார்.
இதனால் இந்திய – இலங்கை இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் அமைதி மற்றும் ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேசத்துரோகம் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி தமிழக மீனவர்கள் மீது அவதூறு பரப்பிய சுப்பிரமணியன் சுவாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-ஆர்.அருண்கேசவன்.