தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டிணம் தசரா திருவிழா தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் ஆய்வு செய்தார்.
குலசேகரப்பட்டிணம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்விழாவிற்கு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வருகை தரவுள்ளார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் பல்வேறு துறை அலுவலர்களோடு நேரில் ஆய்வு செய்தார்.
பின்பு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் கூறும் போது:
தசரா விழாவில் வருகை தரும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலைவசதி, சிறப்பு பேரூந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ குழுக்கள் 24 மணி நேரமும் செயல்படும். 108 ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மூலம் தீயணைப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் ஜந்து படகுகள் (மீனவர்களுடன்) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் சார்பில் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்புற கிராமங்களில் ஏற்படும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் உத்தரவிட்டுள்ளது.
சாலையோர உணவகங்களில் உணவுகள் தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்க உணவு பாதுகாப்பு துறையினரால் ஆய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலைகளை உடனே சீர் செய்ய நெடுஞ்சாலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், விழா சிறப்பாக நடைபெறுவதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழாவிற்கு வரும் பக்தர்கள் கத்தி, அருவாள் போன்ற ஆயுதங்களை கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. விழா அமைதியான முறையில் நடைபெற அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இவ்வாய்வின் போது திருச்செந்தூர் கோட்டாட்சியர் தமிழ்ராஜன், வட்டாட்சியர் நல்லசிவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உலகநாதன், சாமுவேல் பெரியநாயகம், காவல்துறை உதவி ஆணையர் கோவிந்தராஜன், ஆய்வாளர் பாலமுருகன், கோவில் நிர்வாக அலுவலர் கணேசன், குலசேகரப்பட்டிணம் ஊராட்சி தலைவர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-பி.கணேசன் @ இசக்கி.