தமிழ்நாடுமீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான தூத்துக்குடி மீன் வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ஏற்றுமதிக்கான அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் 24.09.2014 முதல் 26.09.2014 வரை நடந்து வருகிறது. அதன் தொடக்கவிழாவில் உள்நாட்டு மீன் வளர்ப்புத்துறை பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் முனைவர் சி.பா.தா. இராஜகோபால்சாமி வரவேற்புரை வழங்கினார்.
அந்ததிட்டத்தின் முதன்மை ஆய்வாளர் மற்றும் பேராசிரியர் முனைவர் ப. அகிலன் திட்டத்தின் குறிக்கோள் பற்றியும் பயிற்சியின் நோக்கத்தைப் பற்றியும் எடுத்து கூறினார். கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) முனைவர். கோ. சுகுமார் தனது தலைமை உரையில் அலங்கார மீன் வளர்ப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
மேலும் அவர் தனது உரையில் ஏற்றுமதி முக்கியத்துவம் வாய்ந்த அலங்கார மீன்களை உற்பத்தி செய்வதன் மூலம் நமது நாட்டின் அந்நிய செலவாணியை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் மீன் வளர்ப்போரும் கணிசமான லாபத்தை அடையலாம் என்றார். தற்போதைய உலகளாவிய அலங்கார மீன் வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் இந்தியாவின் பங்களிப்பு 1 சதவிகிதத்திற்கும் குறைவே என்றும் குறிப்பிட்ட அவர் அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி மேற்கொள்வோர் இதனைத் தொழிலாக மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
பேராசிரியர் முனைவர் ஜா. ஸ்டீபன் சம்பத்குமார் விழாவிற்கு வந்த அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.
இந்த பயிற்சி முகாமிற்கு மீன் வளர்ப்போர் ,ஊரக மகளிர் மற்றும் பொதுமக்கள் என 25 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி முகாமில் மீன்வள விஞ்ஞானிகள் கண்ணாடி தொட்டி தயாரிப்பது மற்றும் மீன்களுக்கான செயற்கை உணவு தயாரிப்பது பற்றிய செய்முறை பயிற்சிகளையும், அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் பற்றிய பாடங்களும் நடத்தப்படவுள்ளன. இதுபோல் 4 பயிற்சி அமர்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும், இதற்கான முழு நிதியுதவியினை ஐதராபாத்திலுள்ள தேசிய மீன்வள அபிவிருத்தி ஆணையம் வழங்கியுள்ளதாகவும் இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறினர்.
-பி.கணேசன் @ இசக்கி.