நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சக்திகளுக்கு எதிராக குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிவினைவாத திட்டத்தின் மூலம் நாட்டின் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் சுயநல சக்திகளுக்கு எதிராக குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்ய நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். விஜயவாடாவில் இன்று விடுதலைப் போராட்ட வீரரும் பத்திரிகையாளருமான தமராஜூ புண்டரிகாக்ஷூடுவின் வாழ்க்கைப் பயணம் குறித்த நூலினை வெளியிட்டுப் பேசிய அவர், எந்தவொரு கலாச்சாரத்தையும் சமயத்தையும் மொழியையும், சிறுமைப்படுத்துவது இந்திய கலாச்சாரம் அல்ல என்பதை வலியுறுத்தினார். இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சிகளை முறியடிப்பதற்கும் ஒன்றுபட்டு தேசத்தின் நலன்களை பாதுகாப்பதற்கும் ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க அவர் அழைப்பு விடுத்தார்.

அனைத்து கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பதும், சகிப்புத்தன்மையும் இந்திய நாகரீகத்தின் மாண்புகள் என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், இதற்கு எதிரான சம்பவங்கள் இந்தியாவின் சமயச்சார்பற்ற கோட்பாடுகளை சீர்குலைக்க முடியாது என்றார். இந்தியாவின் செல்வாக்கை சர்வதேச அரங்கில் சீர்குலைக்கச் செய்யும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த திரு நாயுடு, இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகமும், பன்முகத்தன்மையும், உலகத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்றார்.

இந்த நிகழ்ச்சியில், நூலின் தொகுப்பாசிரியரான திரு எல்லப்பிரகட மல்லிகார்ஜூன ராவ் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் தகவல்கள் சேகரிப்புக்காக அவரை திரு நாயுடு பாராட்டினார். விஜயவாடாவில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் பல்வேறு திறன் மேம்பாட்டுத் திட்டங்களின் பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply