2022, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோதியின் அறிக்கை!

வணக்கம் நண்பர்களே,

இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கும் பருவநிலைக்கும் ஓர் தொடர்புள்ளது. தற்போது பருவமழை தில்லியிலும் வேகமாக முன்னேறி வருகிறது. இருந்த போதும், வெளியே வெப்பநிலை குறையாமல் இருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு உள்ளே வெப்பம் தணியுமா, தணியாதா என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. விடுதலையின் அமிர்த பெருவிழாவை நாம் கொண்டாடும் வேளையில், இந்தக் காலகட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி, சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது; 25 ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாடு இந்திய விடுதலையின் நூற்றாண்டை கொண்டாடும்போது, 25 ஆண்டுகளுக்கான நமது பயணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி நாம் திட்டமிட வேண்டும்; நம்மால் எவ்வளவு விரைவாக முன்னேற முடியும், புதிய உச்சத்தை எவ்வாறு அடையலாம்? இது போன்ற உறுதிப்பாடுகளை மேற்கொள்வதற்கும், இந்த உறுதிப்பாடுகளில் தீவிரமாக இருந்து, நாட்டிற்கு சரியான பாதையை வகுத்துத் தருவதற்குமான காலம், இது. நாடாளுமன்றம், நாட்டை வழிநடத்திச் செல்ல வேண்டும். நாட்டிற்கு புத்துணர்வை அளிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உந்துசக்தியாக செயல்பட வேண்டும். எனவே, அது போன்ற ஓர் கண்ணோட்டத்திலும் இந்தக் கூட்டத்தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் இதே சமயத்தில் நடைபெறுவதாலும் இந்த கூட்டத்தொடரின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. இன்று வாக்களிப்பு நடைபெறுகிறது. மேலும், இந்தக் காலகட்டத்தின்போது புதிய குடியரசுத் தலைவர் மற்றும் புதிய குடியரசு துணைத் தலைவரின் பதவிக் காலம் தொடங்கும்.

மிகுந்த பயனளிக்கும் தொடர்பு ஊடகமாகவும், வெளிப்படையான மனநிலையோடு பேச்சு வார்த்தைகளும், விவாதங்களும் மேற்கொள்ளப்படும் புனித மையமாகவும் நாடாளுமன்றத்தை நாம் எப்போதும் கருதுகிறோம். கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்கு நேர்மறையான பங்களிப்பை அளிப்பதற்காக விவாதங்கள், விமர்சனங்கள் மற்றும் விரிவான பகுபாய்வுகளும் நடைபெறுகின்றன. ஆழமான சிந்தனையுடன், ஆழமான மற்றும் விரிவான விவாதங்களோடு கூட்டத்தொடரை மிகுந்த ஆக்கபூர்வமானதாகவும், பயனுள்ளதாகவும், எடுத்துச் செல்லுமாறு மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். அதற்காகத்தான் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும், அனைவரது முயற்சிகளின் வாயிலாக மட்டுமே ஜனநாயகம் தழைக்கிறது.‌ ஒவ்வொருவரின் முயற்சிகளின் காரணமாகவே நாடாளுமன்றம் இயங்குகிறது. அனைவரின் முயற்சியால் தான் சிறந்த முடிவுகளை நாடாளுமன்றம் எடுக்கிறது. எனவே நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை மேம்படுத்தும் நமது கடமையை நிறைவேற்றும் அதே வேளையில், நாட்டின் நலனைக் கருதி, இந்த கூட்டத்தொடரை முறையாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விடுதலைக்காக தங்கள் இளமையை அர்ப்பணித்து, முழு வாழ்க்கையையும் தியாகம் செய்து, வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும் என்பதையும் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகஸ்ட் 15-ஆம் தேதி நெருங்கி வருவதால் அவர்களது கனவுகளை நினைத்து, நாடாளுமன்றம், சிறந்த வகையில், நேர்மறையாக பயன்படுத்தப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply