பெண் குழந்தைகளை போற்றுங்கள்… பெற்றவர்களை தூற்றாதீர்கள்!–பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

பெற்ற இரு பெண் குழந்தைகளை நஞ்சு கொடுத்து கொன்று விட்டு, தாமும் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்ற இளம் தாய்க்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், மீதமுள்ள இரு பெண் குழந்தைகளை பட்டப்படிப்பு படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்திருக்கிறது. மனிதநேயத்துடன் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஒருபுறமிருக்க பெண் குழந்தைகளை போற்ற வேண்டியது குறித்தும், மகள்களைப் பெற்றெடுக்கும் தாய்கள் சமூகத்தால் தூற்றப்படுவதைக் கண்டித்தும் நீதியரசர் கூறியுள்ள கருத்துகள் பாராட்டத்தக்கவை.

வேலூர் மாவட்டம் பொன்னை பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற ஏழைத்தாய்க்கு 3 பெண் குழந்தைகள். மூன்று குழந்தைகளும் பெண்களாக பிறந்ததால் ஊர்மக்கள் தூற்றியதை தாங்கிக் கொள்ள முடியாமல் கடந்த 22.07.2016 அன்று தமது மூன்று வயது மகளுக்கும், ஒன்றரை வயது குழந்தைக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தாமும் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொள்ள சத்யா முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் சத்யா உயிர் பிழைத்த நிலையில் குழந்தைகள் இரண்டும் உயிரிழந்து விட்டன. அதைத்தொடர்ந்து இரு குழந்தைகளை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் சத்யாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இடையில் மேலும் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த சத்யா, தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

சத்யாவின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதியரசர் பரத சக்கரவர்த்தி, சத்யாவை நீதிமன்றத்திற்கு அழைத்து அவரது மற்ற இரு பெண் குழந்தைகளையும் குறைந்தது பட்டப்படிப்பு வரை படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதிமொழியை பெற்றுக் கொண்டு விடுதலை செய்திருக்கிறார். ‘‘ நமது சமூகத்தில் பாலின பாகுபாடு எந்த அளவுக்கு நிலவுகிறது என்பதற்கு இந்த சோகமான வழக்கு ஓர் எடுத்துக்காட்டு. துரதிருஷ்டவசமாக இந்த நிகழ்வு 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்திருக்கிறது. பெண் குழந்தைகளை மட்டுமே பெற்றதற்காக சமூகத்தால் தூற்றப்பட்ட மனுதாரர், அவமானமடைந்து குழந்தைகளைக் கொன்று தாமும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். ஒரு சமுதாயமாக நாம் இன்னும் திருந்தவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது’’ என்று கூறியிருக்கிறார். நீதியரசரின் கருத்துகள் மிகவும் சரியானவை.

கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் தமிழ்நாடு எவ்வளவோ முன்னேறியிருந்தாலும் கூட, பெண் குழந்தைகளை சுமையாகப் பார்ப்பதில் இன்னும் பின்னேறிக் கொண்டிருப்பது மிகவும் கவலைளிக்கிறது. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் சாதித்து வருகின்றனர். விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வதில் தொடங்கி இராணுவத்தில் முன்கள வீரர்களாக போரிடுவது வரை அனைத்திலும் அவர்கள் தங்களின் திறமைகளை நிரூபித்திருக்கும் நிலையில், பெண் குழந்தைகளை இன்னும் சுமையாகவே கருதுவது சமூகத்தில் பிற்போக்குத்தனம் புரையோடியிருப்பதையே காட்டுகிறது.

ஒரு மருத்துவராக நான் அறிவேன். மருத்துவ அறிவியல் விதிகளின்படி ஒரு குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை தீர்மானிப்பதில் பெண்ணின் அணுக்களுக்கு எந்த பங்கும் இல்லை; ஆணின் குரோமோசோம்கள் தான் குழந்தைகளின் பாலினத்தை தீர்மானிக்கின்றன. அவ்வாறு இருக்கும்போது பெண் குழந்தைகளை பெற்றதற்காக பெண்களைத் தூற்றுவது சமூகத்தின் அறியாமையையே காட்டுகிறது. இந்த அறியாமை தான் நவீன நல்லத் தங்காள்களை உருவாக்குகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்றவை செலவு பிடிக்கும் விஷயங்களாக இருப்பதும், பெண்களை வளர்த்தெடுக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தான் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்க வைக்கின்றன. ஆனால், இவை எதற்கும் பெண் குழந்தைக்கள் காரணமல்ல… மாறாக இத்தகைய வழக்கங்களை உருவாக்கிய சமூகம் தான் அனைத்துக்கும் காரணம். சமூகத்தின் தவறுக்கு, சமூகமே பெண் குழந்தைகளையும், தாயையும் தூற்றுவது எந்த வகையில் நியாயம்?

என்னைப் பொறுத்தவரை பெண் குழந்தைகள் குழந்தைகள் அல்ல… அவர்கள் வீட்டின் பெண் தெய்வங்கள். அவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். பெண்களைச் சுற்றிலும் காலம் காலமாக ஏற்படுத்தப்பட்ட தளைகளை அகற்ற வேண்டுமானால், அவர்களுக்கு கல்வியையும், உரிமைகளையும் வழங்குவதன் மூலம் தான் சாத்தியமாகும். எனவே, பெண் குழந்தைகளையும், அவர்களை பெற்ற தாய்களையும் தூற்றுவதை விடுத்து போற்றுவதற்கு சமூகம் முன்வர வேண்டும். அனைத்து பெண்களுக்கும் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். அதற்காக மாணவிகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்கல்வி வரை இலவசக் கல்வி வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply