வரி செலுத்துவதை எண்ணி பெருமை கொள்ள வேண்டும்!-ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

வரி செலுத்துபவராக இருப்பதை நினைத்து பொதுமக்கள் பெருமை கொள்ள வேண்டும் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற வருமான வரி தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், வருமான வரித்துறையின் நோக்கம் நாட்டின் நலனே தவிர, வரி செலுத்துவோருக்கு சுமை ஏற்படுத்துவது அல்ல என்று கூறினார். நாம் செலுத்தும் வரி நாட்டின் வளர்ச்சிக்கானது என்று தெரிவித்த அவர், 2025-ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா ஈட்ட வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பிரதமர் திரு மோடியின் வழிகாட்டுதலோடு, பொதுமக்களுடன் நெருங்கி பணியாற்றுவதற்கான ஏராளமான புதுமையான நடவடிக்கைகளை வருமானவரித்துறை மேற்கொண்டுள்ளது. வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, பலர் தன்னார்வமாக வரி செலுத்த முன்வருவதிலிருந்து இதன் தாக்கம் புலனாகிறது.

வரி செலுத்துபவர்களையும், வருமான வரி அதிகாரிகளையும் நிகழ்ச்சியின்போது கௌரவித்த வருமான வரித் துறைக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். வருமான வரி நடைமுறைகளை மேலும் எளிதாக்குமாறு அத்துறையை வலியுறுத்திய அவர், மின்னணு நடைமுறைகள் தொடர்பாக பொதுமக்களிடையே, குறிப்பாக கிராமப்புறங்களில் அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கோரிக்கைவிடுத்தார். வரி செலுத்துவதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைக்குமாறு ஊடகங்களையும் அரசு சாரா அமைப்புகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

விழாவில் பேசிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சட்டங்களை எளிமையாக்குவது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்றார். சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாக்கப்பட்டால் நீதிமன்றங்களின் பணி வெகுவாகக் குறையும் என்றார் அவர்.

வருமான வரித்துறையின் பல்வேறு சமூகப் பொறுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் அதிகரித்து வருவதால் கண்காணிப்பு இல்லங்களில் உள்ள 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

வருமான வரித்துறையின் பல்வேறு சாதனைகள் மற்றும் புதுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் எடுத்துரைத்தார். நாட்டின் நேரடி வரி வருவாய்க்கு நான்காவது மிகப் பெரிய பங்களிப்பை தமிழகம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

திவாஹர்

Leave a Reply