மறைந்த முன்னாள் நாடாளுமன்ற, மேலவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரும், சௌரிய சக்ரா விருது பெற்றவருமான ஹர்மோகன் சிங் யாதவின் 10-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக பழங்குடியின சமுதாயத்தைச்சேர்ந்த ஒரு பெண், இன்று நாட்டின் உயர்ந்த பதவி ஏற்றுள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய நாள் இதுவாகும் என்று அவர் கூறினார்.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெருமைமிக்க தலைவர்கள் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர், இம்மாநிலத்தின் கான்பூர் மண்ணைச்சேர்ந்த டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் சிந்தனைகளை, ஹர்மோகன் சிங் யாதவ் முன்னெடுத்துச் சென்றதாக தெரிவித்தார்.
நாடு மற்றும் மாநிலத்தில் அரசியலில் அவர் ஆற்றிய பங்களிப்பு, சமூகத்திற்கு அவர் ஆற்றிய பணி ஆகியவை இப்போதும் மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளது என்று கூறினார். கிராமசபை முதல் மாநிலங்களவை வரையும் அவருடைய அளப்பரிய பயணம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். தமது வாழ்க்கை குறித்து அக்கறை கொள்ளாமல், பல சீக்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட்டார். அவருடைய தலைமைப் பண்பை, அங்கீகரித்து சௌரிய சக்ரா விருது வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்