தாய் பகவான், தந்தை பகவானை தவிர; உலகில் வேறு எந்த பகவானும் இல்லை!-அமாவாசையினா சும்மா இல்லை!

வானவியல் கணிப்பின்படி சூரியனும், சந்திரனும் ஒரே இராசியில் கூடுகின்ற காலம்தான் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர்காரகன்” என்றும், சந்திரனை “மாதுர்காரகன்” என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. எனவே, சந்திரனும், சூரியனும் நமது மாதா, பிதாவை குறிக்கின்றது. இன்னும் எல்லோருக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமானால், சந்திரன் அம்மாவையும், சூரியன் அப்பாவையும் குறிக்கின்றது.

சூரிய பகவான்: ஆண்மை, ஆற்றல், வீரம், துணிவு ஆகியவற்றை நமக்குத் தரவல்லவர்.

சந்திர பகவான்: நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் அன்பு, அரவணைப்பு, கருணை, மகிழ்ச்சி, தெளிவான சிந்தனை, தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் ஆகியவற்றை நமக்குத் தரவல்லவர்.

இத்தகைய உணர்வுகளையும், பெருமைகளையும் நம் தாய், தந்தை நமக்குத் தருகின்ற காரணத்தால்தான் அவர்களை சந்திரனுக்கும், சூரியனுக்கும் நிகராக நமது முன்னோர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

சந்திர பகவான், சூரிய பகவான் என்று அழைப்பதைவிட, தாய் பகவான், தந்தை பகவான் என்று குறிப்பிடுவதுதான் மிக பொருத்தமாக இருக்கும்.

எனவே, தாய் பகவான், தந்தை பகவானை தவிர; உலகில் வேறு எந்த பகவானும் இல்லை என்பதைதான் அனைத்து மதங்களும் நமக்கு எழுத்துப்பூர்வமாகவே உணர்த்துகிறது.

ஆனால், இந்த உண்மையை உணராத மனித ஜென்மங்கள் தாய், தந்தையை அனாதையாக தவிக்க விட்டுவிட்டு கோயில், கோயிலாக சுற்றி திரிகிறார்கள். அதனால் எந்த பிரயோசனமும் இல்லை என்பது அவர்களுக்கு உண்மையிலுமே தெரியவில்லை.

“கண்களை விற்றுவிட்டு சித்திரம் வாங்குவதும்; குழந்தையை விற்றுவிட்டு தொட்டில்கள் வாங்கிய கதையாகதான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது”

எதை தின்றால் பித்தம் தெளியும்? என்ற குழப்பத்தில் அலையும் இத்தகைய மனிதர்கள் வாழ்வதற்கே அருகதை அற்றவர்கள்!

எவர் ஒருவர் தாய், தந்தையை உயிராக மதித்து; அவர்களுக்கு பணிவிடை செய்து; கடைசி காலம் வரை அவர்களை கண்கலங்காமல் அன்பாக பராமரித்து, பாதுகாக்கிறார்களோ; அப்படிப்பட்டவர்களுக்கு அவர்கள் வாழும்போதும்; அவர்கள் வாழ்க்கைக்கு பிறகும், அவரது தாய், தந்தையர்கள் தெய்வங்களாக இருந்து அவரை மட்டுமல்ல; அவரது சந்ததிகளையும் நிச்சயம் வழி நடத்துவார்கள்!-இது சத்தியம்.

எனவே, எதிர்வரும் காலங்களிலாவது “அமாவாசை” தினத்தை அர்த்தமுள்ள நிகழ்வாக வழிபடுவோம்! தாய், தந்தை மட்டுமே நமக்கு உண்மையான தெய்வம் என்பதை நமது சந்ததியினருக்கு பசுமரத்து ஆணிபோல இதன் மூலம் ஆழ்மனதில் அடித்து பதிய வைப்போம்.

-Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply